மக்கள் நீதி மய்யம் நூதன முறையில் கோரிக்கை மனு
தமிழகத்தில் மக்களுக்கு அரசு சேவைகள் விரைவாக கிடைக்கும் வகையில் சேவைபெறும் உரிமை சட்டத்தினை நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் ஓடாத கடிகாரங்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நூதன முறையில் மனு அளித்தனர்.
ராமநாதபுரம்,
தமிழகத்தில் மக்களுக்கு அரசு சேவைகள் விரைவாக கிடைக்கும் வகையில் சேவைபெறும் உரிமை சட்டத்தினை நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் ஓடாத கடிகாரங்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நூதன முறையில் மனு அளித்தனர்.
ஓடாத கடிகாரங்கள்
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன், சேகர் ஆகியோர் தலை மையில் நிர்வாகிகள் ஓடாத கடிகாரங்களுடன் அரசு சேவை காலதாமதமின்றி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசின் சேவைகள் மக்களுக்கு விரைவாக சென்று அடைவதில்லை. அரசு அலுவலகங்களுக்கு வரும்போது மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். லஞ்சம் கொடுத்துதான் அரசு சேவைகளை பெற முடியும் என்ற நிலை உள்ளது. ஒரு கட்டத்தில் நேர்மையாக செயல்பட விரும்பும் அரசு அலுவலர்கள்கூட நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.
இதனால், மக்களின் அடிப்படை தேவைகளான ரேஷன் ்கார்டு, குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் உள்ளிட்டவை தொடங்கி அனைத்து சேவைகளும் குறித்த காலத்திற்குள் கிடைக்க முடியாத நிலை உள்ளது.
உரிமை சட்டம்
இந்த நிலையை மாற்றி விரைவான தரமான அரசு சேவைகள் மக்களை சென்றடைய வழிவகுக்கும் வகையில் சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும். அரசு நிர்வாகத்தில், மக்களுக்கான அரசு சேவைகளுக்கு கால நிர்ணயம் செய்து குடிமக்கள் சாசனம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த குடிமக்கள் சாசனம் அரசு சேவைகளுக்கும் அதனை அமல்படுத்த வேண்டும்.
குடிமக்கள் சாசனம் இல்லாத அரசு துறைகளில் சேவையை உறுதிப்படுத்த தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்.
தகவல் பெறும் உரிமை சட்டத்தில் எவ்வாறு முறையீடு, மேல்முறையீடு ஆகியவற்றின் மூலம் குறித்த காலத்திற்குள் மனுதாரர் தகவலைப் பெற முடியுமோ, அதே போல் குடிமக்கள் சாசனத்திலும் அரசு சேவை கிடைக்காவிட்டால் அதற்கு காரணமான அரசு ஊழியர் கேள்விக்கு உட்படுவார். இதனை சேவை பெறும் உரிமை சட்டம் உறுதிப்படுத்துகிறது.
காலதாமதம்
இந்த சட்டத்தின்படி எடுத்துப்பூர்வமான பதிலை தரவேண்டும் என்பதால் நிச்சயம் கால தாமதமில்லாத சேவை மக்களுக்கு கிடைக்கும். அரசு ஊழியர்களின் பொறுப்பு அதிகரித்து மக்களுக்கு தரமான சேவை கிடைக்கும். எனவே, இந்த சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
மத்திய பிரதேசம், பீகார், டெல்லி, கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தமிழக அரசு இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றி மக்களுக்கு விரைவான சேவை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story