மருத்துவ மாணவன் நவீனின் நிறைவேறாத ஆசை-சித்தி கண்ணீர் பேட்டி
சலகேரி கிராமத்தில் ஆஸ்பத்திரி கட்ட வேண்டும் என்ற நவீனின் ஆசை நிறைவேறாமல் போய் விட்டதாக நவீனின் சித்தி கண்ணீர் மல்க கூறினார்.
பெங்களூரு:
நவீன் உடல் வருகை
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தாலுகா சலகேரி கிராமத்தை சேர்ந்தவர் சேகரப்பா. இவரது மகன் நவீன்(வயது 22). இவர் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வந்தார். இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷியா போர் நடத்தி வருகிறது. கடந்த 1-ந் தேதி ரஷிய படையின் வெடிகுண்டு தாக்குதலில் நவீன் உயிரிழந்தார்.
21 நாட்களுக்கு பின்னர் நவீனின் உடல் உக்ரைனில் இருந்து நேற்று அதிகாலை பெங்களூரு விமான நிலையத்திற்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சலகேரி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சலகேரி கிராமத்தில் உள்ள நவீனின் வீட்டின் முன்பு அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
மடாதிபதி அஞ்சலி
நேற்று நவீன் உடல் அவரது வீட்டிற்கு சென்றதும் சலகேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டு வந்தனர். அவர்கள் நவீனின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அதுபோல் நவீனின் உடலை பார்த்து அவரது தந்தை சேகரப்பா, தாய் விஜயலட்சுமி, சகோதரர் மற்றும் உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். நவீன் குடும்பத்தினர் முதலில் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் வசித்து இருந்தனர்.
இதனால் நஞ்சன்கூடுவில் இருந்தும் நவீனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அவரது பால்ய கால நண்பர்களும் வந்து இருந்தனர். நவீன் உடலுக்கு வீரசைவ லிங்காயத் முறைப்படி இறுதி சடங்கு நடந்தது. இந்த சடங்கை அர்ச்சகர் சன்னவீரய்யா என்பவர் நடத்தினார். நவீன் உடலுக்கு மடாதிபதி வச்சானந்த சாமியும் அஞ்சலி செலுத்திவிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
ஆசை நிறைவேறாமல்...
இந்த நிலையில் நவீனின் சித்தி சாந்தா
நிருபர்களிடம் கூறும்போது, ‘எனது அக்கா, மாமா எந்தவித சொத்துகளையும் சேர்க்கவில்லை. 2 மகன்கள் தான் அவர்களின் சொத்து. நவீனை கஷ்டப்பட்டு மருத்துவம் படிக்க வைத்தனர். அவன் எப்படியாவது டாக்டர் ஆகிவிடுவான் என்று கனவில் இருந்தனர். அவர்கள் கனவில் இடி விழுந்து விட்டது. மருத்துவம் படித்து விட்டு சலகேரி கிராமத்தில் சொந்தமாக ஆஸ்பத்திரி கட்டி ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்க நவீன் விரும்பினார்.
ஆனால் அவரது ஆசை நிறைவேறாமல் போய் விட்டது. சிவராத்திரி அன்று நவீன் உயிரிழந்து விட்டார். அவர் எங்கள் குடும்பத்தின் சாமி. நவீன் இறந்த செய்தி கேட்டதும் எங்கள் இதயம் உடைந்து போய் விட்டது. நவீன் உடலை கொண்டு வர முயற்சி செய்த அனைவருக்கும் நன்றி’’ என்று கண்ணீர்மல்க கூறினார்.
கன்னடம் மீது பற்று
நவீனின் நண்பர் பிரவீன் என்பவர் கூறுகையில், ‘நவீனின் மரணம் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் எல்லோருக்கும் உதவும் மனபான்மை கொண்டவர். அவரிடம் உதவி என்று கேட்டு செல்பவர்களுக்கு இல்லை என்று அவர் சொன்னது இல்லை. எங்கள் டாக்டர் நவீனை நாங்கள் இழந்து விட்டோம் என்றார். சலகேரியை சேர்ந்த சுமன் என்ற நண்பர் கூறும்போது, நான் நவீனை சிறிய வயதில் இருந்தே பார்த்து வருகிறேன். அவர் மிகவும் நல்லவர். அனைவருக்கும் உதவும் மனது கொண்டவர்.
நானும் உக்ரைனில் மருத்துவம் படித்து வந்தேன். நவீனுக்கு கன்னட மொழி மீது அதிக பற்று உண்டு. உக்ரைனில் எங்கள் நண்பர்கள் அனைவரையும் இணைத்து கன்னட ராஜ்யோத்சவாவை அவர் கொண்டாடுவார்’ என்றார்.
சிரேயான்ஸ் என்ற நண்பர் கூறுகையில், ‘உக்ரைனில் நானும், நவீனும் ஒரே கல்லூரியில் படித்து வந்தோம். கொரோனா நேரத்தில் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அறுவை சிகிச்சையும் எனக்கு நடந்தது. அப்போது எனது அருகில் இருந்து நவீன் என்னை கவனித்து வந்தார். நவீன் எனக்கு நண்பர் போலவும், அம்மா போலவும் இருந்தார். அவர் செய்த உதவிகளுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் ஈடாகாது’ என்றார்.
Related Tags :
Next Story