விபத்து நடந்த பாவகடா பகுதியில் புதிதாக 14 டவுன் பஸ்கள் இயக்கம்; சட்டசபையில் போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு தகவல்


விபத்து நடந்த பாவகடா பகுதியில் புதிதாக 14 டவுன் பஸ்கள் இயக்கம்; சட்டசபையில் போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு தகவல்
x
தினத்தந்தி 21 March 2022 9:26 PM IST (Updated: 21 March 2022 9:26 PM IST)
t-max-icont-min-icon

துமகூரு மாவட்டத்தில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட பாவகடா பகுதியில் கூடுதலாக 12 அரசு டவுன் பஸ்களை இயக்க உத்தரவிட்டுள்ளேன் என்று சட்டசபையில் போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு கூறினார்

பெங்களூரு:

கேள்வி நேரத்திற்கு அனுமதி

  கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 4-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாளில் 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்றது. அந்த விவாதம் முடிவடைந்ததை அடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் அது நிறைவேற்றப்பட்டது.

  அதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டசபைக்கு கடந்த சனி, ஞாயிறு விடுமுறை விடப்பட்டது. இந்த 2 நாட்கள் வழக்கமான விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை நேற்று மீண்டும் கூடியது. பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை தொடங்கிய இக்கூட்டத்தில் முதலில் கேள்வி நேரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ரூ.25 லட்சம் நிவாரணம்

  அதைத்தொடர்ந்து பூஜ்ஜிய நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. இதில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் யு.டி.காதர், துமகூரு மாவட்டம் பாவகடா தனியார் பஸ் விபத்து குறித்து பிரச்சினை கிளப்பினார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த பிரச்சினைக்கு போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு பதிலளிக்கையில் கூறியதாவது:-

  துமகூரு மாவட்டம் பாவகடாவில் நேற்று முன்தினம் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், நான் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கினேன். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் நிவாரணம் வழங்கியுள்ளோம்.

அதிவேகமாக இயக்கியதே...

  பாவகடா பகுதியில் 6 பஸ்கள் மட்டுமே இயங்கியுள்ளது. அதனால் தனியார் பஸ்சில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்துள்ளனர். அந்த பஸ்சின் டிரைவர் அதிவேகமாக பஸ்சை இயக்கியதே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. பாவகடா பகுதியில் கூடுதலாக 14 டவுன் பஸ்களை இயக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். தேவைப்பட்டால் இன்னும் கூடுதல் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

  விபத்துக்கு உள்ளான பஸ் முறைப்படி உரிமம் பெற்றுள்ளது. தகுதி சான்றிதழையும் வைத்துள்ளது. போக்குவரத்து துறையில் சோதனைகளை மேற்கொள்ளாத சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள். வரும் நாட்களில் இத்தகைய விபத்துகளை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
  இவ்வாறு ஸ்ரீராமுலு கூறினார்.


Next Story