கழுத்தை அறுத்து மனைவி படுகொலை;தொழிலாளி தற்கொலை முயற்சி
பெங்களூரு அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தை அறுத்து மனைவி படுகொலை செய்யப்பட்டார். மகனை கத்தியால் குத்தியதுடன், தொழிலாளியும் தற்கொலைக்கு முயன்ற பயங்கரம் நடந்துள்ளது
பெங்களூரு:
தம்பதி இடையே தகராறு
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா அத்திபெலே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட யடவனஹள்ளி அருகே அப்பண்ண பாளையாவில் வசித்து வருபவர் சம்பத், தொழிலாளி. இவரது மனைவி லாவண்யா(வயது 31). இந்த தம்பதிக்கு 12 ஆண்டுக்கு முன்பு திருமணம் முடிந்திருந்தது, 2 மகன்கள் உள்ளனர். சம்பத்திற்கும், லாவண்யாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
மேலும் சம்பத்திற்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், நேற்று முன்தினம் இரவு லாவண்யாவின் பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தனர். பின்னர் மருமகன் சம்பத் மற்றும் மகளை சமாதானப்படுத்தி இருந்தனர். மேலும் சண்டை போடாமல் குடும்பம் நடத்தும்படி லாவண்யாவின் பெற்றோர் கூறிவிட்டு சென்றிருந்தார்கள்.
கழுத்தை அறுத்தார்
இதையடுத்து, சம்பத்தும், லாவண்யாவும் தங்களது பிள்ளைகளுடன் படுத்து தூங்கினார்கள். இந்த நிலையில், நேற்று அதிகாலையில் எழுந்த சம்பத் வீட்டில் கிடந்த கத்தியை எடுத்து தூங்கி கொண்டு இருந்த லாவண்யாவின் கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். அந்த சந்தர்ப்பத்தில் முதல் மகன் எழுந்து சம்பத்தை பிடிக்க முயன்றுள்ளார். உடனே ஆத்திரத்தில் தனது மகனையும் கத்தியால் குத்தி இருக்கிறார். இதில், அவனது கையில் காயம் ஏற்பட்டு இருக்கிறது.
பின்னர் திடீரென்று சம்பத்தும் தனது கழுத்தை அதே கத்தியால் அறுத்து கொண்டார். ரத்தம் வழிந்த நிலையில் வீட்டில் இருந்து அவர் வெளியே வந்திருக்கிறார். அப்போது வீட்டின் அருகே உள்ள சாக்கடைக்குள் சம்பத் தவறி விழுந்தார். இதைப்பார்த்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடிவந்தனர். இதுபற்றி உடனடியாக அத்திபெலே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சம்பத்தையும், அவரது மகனையும் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
நடத்தையில் சந்தேகம்
அதே நேரத்தில் லாவண்யாவின் கழுத்தை அறுத்திருந்ததால், ரத்த வெள்ளத்தில் அவர் வீட்டின் ஒரு அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். அப்போது லாவண்யாவின் நடத்தையில் சம்பத் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்ததாகவும், நேற்று முன்தினம் குடும்பத்தினர் சமாதானப்படுத்தி இருந்தும், நேற்று அதிகாலையில் எழுந்த சம்பத் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொன்றதுடன், தடுக்க வந்த மகனின் கையில் குத்தியதுடன், தானும் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.
இதற்கிடையில், சம்பத்தின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அத்திபெலே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அத்திபெலேயில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
Related Tags :
Next Story