குடியாத்தம் கவுண்டன்ய மகாநதியில்வீடுகளை இடிப்பதை தள்ளி வைக்க வேண்டும். குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாணவ- மாணவிகள் மனு
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதியில் வீடுகள் இடிக்கும் பணியை தள்ளி வைக்கவேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாணவ- மாணவிகள் மனு அளித்தனர்.
வேலூர்
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதியில் வீடுகள் இடிக்கும் பணியை தள்ளி வைக்கவேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாணவ- மாணவிகள் மனு அளித்தனர்.
குறைதீர்வு நாள் கூட்டம்
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகளை மனுவாக எழுதி நீண்ட வரிசையில் நின்று கலெக்டர் குமாரவேல்பாண்டியனிடம் வழங்கினர். முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இலவச பயணம்
கூட்டத்தில், இந்து தேசிய கட்சி வேலூர் மாவட்ட தலைவர் சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், தமிழகத்தில் அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வறுமை கோட்டிற்கு கீழே உள்ள அனைத்து ஆண்களும் டவுன் பஸ்சில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். இதில், ஆண்கள், பெண்கள் பாகுபாடு இன்றி செயல்பட வேண்டும். அதேபோன்று பெண்கள் தமிழகம் முழுவதும் செல்வதற்கு இலவச பஸ் பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.
வேலூர் மாநகராட்சி 52-வது வார்டு பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் வார்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் சுடுகாட்டிற்கு செல்லும் சாலையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டுவதற்கான முயற்சி நடந்து வருகிறது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
வீடுகள் இடிக்க கூடாது
குடியாத்தத்தை அடுத்த நெல்லூர்பேட்டை பாவோடும்தோப்பு பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் அளித்த மனுவில், கவுண்டன்ய மகாநதியோரத்தில் உள்ள வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. அந்த பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகள் ஓரிருநாளில் இடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வீடுகளில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகிறார்கள். 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் எங்கள் வீடுகளை இடித்தால் பள்ளிக்கு செல்ல முடியாமல் கல்வி மற்றும் வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே பொதுத்தேர்வு முடியும்வரை வீடுகள் இடிப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
முகாமில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 45 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 91 ஆயிரத்து 825 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார்.
Related Tags :
Next Story