தக்காளி விலை சரிவு காரணமாக பறிக்காமல் செடியோடு பழங்களை விவசாயிகள் உழுது வருகின்றனர்
தக்காளி விலை சரிவு காரணமாக பறிக்காமல் செடியோடு பழங்களை விவசாயிகள் உழுது வருகின்றனர்
குடிமங்கலம்:
குடிமங்கலம் பகுதியில் தக்காளி விலை சரிவு காரணமாக பறிக்காமல் செடியோடு பழங்களை விவசாயிகள் உழுது வருகின்றனர்.
தக்காளி சாகுபடி
குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதிகளில் மக்காச்சோளம் அதிகளம் சாகுபடி செய்யப்படுகிறது. இதுதவிர கிணற்றுப்பாசனம் மூலம் மிளகாய், தக்காளி வெண்டைகாய், கொத்தமல்லி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
குறைந்த நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும் என்பதால் விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குடிமங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் 14 கிலோ கொண்டபெட்டி அதிகபட்சமாக ரூ.60 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் தக்காளி பழங்களை பறிக்காமல் செடியோடு உழும் நிலை ஏற்பட்டுள்ளது.
விலை சரிவு
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:-
ஒரு ஏக்கர் தக்காளி சாகுபடியில் 20 ஆயிரம் நாற்றுகள் தேவைப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு நடவு, உரம், மருந்துதெளித்தல், அறுவடை என ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது. தண்ணீர் முறையான பராமரிப்புக்கு ஏற்ப அதிகபட்சம் ஏக்கருக்கு 12 டன் வரை விளைச்சல் கிடைக்கும். தினமும் 40 பெட்டிகள் வரை அறுவடை செய்யலாம். கடந்த சில நாட்களாக 14 கிலோ கொண்ட ஒரு பெட்டியின் விலை அதிகபட்சமாக ரூ.60-க்கு மட்டுமே விற்பனையாகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகம் உள்ளதும், உடுமலை வட்டாரத்தில் ஒரே நேரத்தில் அறுவடையாவதும் விலை வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது. தக்காளி விலைசரிவு காரணமாக விவசாயிகள் தக்காளி பழங்களை பறிக்காமல் உள்ளனர். இதனால் தக்காளிபழங்கள் செடியிலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு தொடர்ச்சியான விலை வீழ்ச்சி காரணமாக பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் தக்காளி பழங்களை பறிக்காமல் செடியோடு விவசாயிகள் உழுது வருகின்றனர்.
Related Tags :
Next Story