வேலூர் தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம். 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை
காட்பாடியில் நண்பருடன் சினிமா பார்த்துவிட்டு ஆட்டோவில் திரும்பிய வேலூர் தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலூர்
காட்பாடியில் நண்பருடன் சினிமா பார்த்துவிட்டு ஆட்டோவில் திரும்பிய வேலூர் தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இரவு காட்சி சினிமா
வேலூர் சத்துவாச்சாரி இந்திராநகரில் குடிபோதையில் சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அதில், 2 பேர் வழக்கத்துக்கு மாறாக டிப்-டாப் உடை அணிந்திருந்தனர். இதுகுறித்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் சம்பவம் ஒன்றை தெரிவித்துள்ளனர். அதுகுறித்த விவரம் வருமாறு:-
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் இளம்பெண் ஊழியர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆண் நண்பருடன் காட்பாடியில் உள்ள சினிமா தியேட்டரில் இரவு காட்சி பார்க்க சென்றுள்ளார். படம் முடிந்து நள்ளிரவு 12.30 மணியளவில் 2 பேரும் தியேட்டர் முன்பாக ஆட்டோவுக்காக காத்து நின்றனர். அப்போது அந்த வழியாக ஒரு ஆட்டோ வந்தது. அதன் டிரைவர் அவர்களிடம் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறி உள்ளனர்.
பாலியல் பலாத்காரம்
ஆட்டோவின் உள்ளே 3 ஆண்கள் அமர்ந்திருந்தனர். அதனால் 2 பேரும் அதில் ஏறுவதற்கு தயங்கி உள்ளனர். அதற்கு டிரைவர் இது ஷேர் ஆட்டோ தான். அதனால் நீங்களும் ஏறுங்கள் என்று தெரிவித்துள்ளார். அதையடுத்து அவர்கள் ஆட்டோவில் ஏறி பயணித்தனர். காட்பாடியில் இருந்து வேகமாக வந்த ஆட்டோ கிரீன் சர்க்கிள் வந்ததும் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலை நோக்கி திரும்பியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் இங்கே ஏன் செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு டிரைவர், சிறிதுதூரத்தில் வேலை நடப்பதால் சாலையை அடைத்துள்ளனர். அதனால் சுற்றியபடி மருத்துவமனைக்கு செல்ல உள்ளோம் என்றார்.
சிறிதுதூரம் சர்வீஸ் சாலையில் சென்ற ஆட்டோ திடீரென அந்த பகுதியில் உள்ள ஷோரூம் அருகே உள்ள சாலைக்குள் சென்றது. இதனால் பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பர் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். பெண் ஊழியர் இதுகுறித்து டிரைவரிடம் கேட்டுள்ளார். அப்போது ஆட்டோவில் இருந்த மற்ற 3 பேரும் பெண் ஊழியரின் நண்பரை அடித்து உதைத்து விரட்டினர். பின்னர் கத்திமுனையில் பெண் ஊழியரை ஆட்டோவில் கடத்தி பாலாற்றங்கரையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து செல்போன், ஏ.டி.எம். கார்டு, பணத்தை பறித்துள்ளனர். பின்னர் பெண் ஊழியரை அவரின் நண்பரிடம் அழைத்து சென்று விட்டு மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
3 பேரிடம் விசாரணை
இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்து பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பர் இதுகுறித்து யாரிடமும் கூறவில்லை. மறுநாள் பெண் ஊழியரின் ஏ.டி.எம். கார்டில் இருந்து ரூ.40 ஆயிரம் எடுத்து 4 பேரும் பங்கு பிரித்துள்ளனர். அதில், கிடைத்த பணத்தில் 2 பேர் டிப்-டாப் உடைகள் வாங்கியும், உணவு மற்றும் மதுஅருந்தி உல்லாசமாக இருந்துள்ளனர். குடிபோதையில் தகராறில் ஈடுபட்டபோது தான் டிப்-டாப் உடை அணிந்த 2 பேரும் போலீசில் சிக்கினர்.
அதையடுத்து 2 பேரும் தெரிவித்த தகவலின்படி மேலும் ஒருவரை போலீசார் பிடித்தனர். தொடர்ந்து 3 பேரிடமும் தீவிரமாக போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் மற்றொருவரை தேடி வருகிறார்கள். இதில், சம்மந்தப்பட்ட பெண் ஊழியர் அல்லது ஆண் நண்பரிடம் புகார் பெற்று வழக்குப்பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story