ஓராண்டாக ஆசிரியர் நியமிக்காததால் பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்களுடன் பெற்றோர் போராட்டம் குஜிலியம்பாறை அருகே பரபரப்பு


ஓராண்டாக ஆசிரியர் நியமிக்காததால் பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்களுடன் பெற்றோர் போராட்டம் குஜிலியம்பாறை அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 21 March 2022 9:58 PM IST (Updated: 21 March 2022 9:58 PM IST)
t-max-icont-min-icon

குஜிலியம்பாறை அருகே, ஓராண்டாக ஆசிரியர் நியமிக்காததால் பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்களுடன் பெற்றோர் போராட்டம் நடத்தினர்.

குஜிலியம்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே சி.அம்மாபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 58 மாணவ, மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியை, ஒரு இடைநிலை ஆசிரியை என 2 பேர் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் இடைநிலை ஆசிரியை கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், பூவானி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாறுதலாகி சென்றுவிட்டார். 
இதனால் சி.அம்மாபட்டி தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. 
இதனால் பெற்றோர்கள் கடந்த மாதம் 11-ந்தேதி பள்ளிக்கு சென்று, கடந்த ஒரு ஆண்டாக ஆசிரியர் இல்லாத காரணத்தால் குழந்தைகளின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும். தங்கள் குழந்தைகளின் மாற்றுச்சான்றிதழை கேட்டும் தலைமை ஆசிரியை செல்வகாந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தலைமை ஆசிரியை உறுதி அளித்தார். இதையடுத்து பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுகுறித்து மாவட்ட கல்வி நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
பள்ளிக்கு பூட்டு
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் நேற்று பள்ளியின் ‘கேட்’டை இழுத்து மூடி பூட்டு போட்டு பூட்டினர். பின்னர் அவர்கள் மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார கல்வி அலுவலர் தங்கமணி அங்கு விரைந்து வந்து பெற்றோரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வேடசந்தூர் கல்வி மாவட்ட அலுவலர் இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு முடிவு எடுக்காத வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறி பெற்றோர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். 
இதையடுத்து மதியம் 12.15 மணி அளவில் வேடசந்தூர் கல்வி மாவட்ட அலுவலர் கீதா சி.அம்மாபட்டி பள்ளிக்கு வந்தார். பின்னர் அவர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், சி.அம்மாபட்டி தொடக்கப்பள்ளிக்கு நிரந்தர இடைநிலை ஆசிரியர் நியமிக்கப்படும் வரை குஜிலியம்பாறை அருகே உள்ள லந்தக்கோட்டை செல்வ விநாயகர் உதவி பெறும் தொடக்கப்பள்ளியிலிருந்து விஜயலட்சுமி என்ற ஆசிரியை இங்கு மாற்றுப்பணி ஆசிரியையாக தொடர்ந்து பணிபுரிவார் என்றார். 
இதில் சமாதானம் அடைந்த பெற்றோர்கள், பள்ளியின் கேட்டை திறந்து தங்கள் குழந்தைகளை பள்ளிக்குள் அனுப்பினர். இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பள்ளி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story