சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தினர் கலெக்டர் வினீத்திடம் மனு
சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தினர் கலெக்டர் வினீத்திடம் மனு
திருப்பூர்:
சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தினர் கலெக்டர் வினீத்திடம் மனு கொடுத்து முறையிட்டனர்.
சேவை உரிமை சட்டம்
திருப்பூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் விவரம் வருமாறு:-
மக்கள் நீதி மய்யத்தினர் அளித்த மனுவில், ‘தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் சேவை உரிமை சட்டம் நிறைவேற்றப்படும் என்று குறிப்பிட்டது. கடந்த சட்டமன்றப்பேரவை கூட்டத்தொடரில் பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் நிறைவேற்றப்படும் என்று கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது. தற்போது வரை செயல்படுத்தப்படாமல் உள்ளது ஏமாற்றமளிக்கிறது. அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை தடுப்பதற்கும், பொதுமக்களுக்கு உரிய சேவைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழக அரசு சேவை பெறும் உரிமை சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
பாலம் அடைப்பு
திருப்பூர் பழங்கரை அவினாசிலிங்கம்பாளையத்தை சேர்ந்த குட்டியப்பன் மற்றும் மக்கள் அளித்த மனுவில், ‘அவினாசிலிங்கம் பைபாஸ் ரோட்டில் இருந்து பழைய ஈரோடு ரோடு செல்லும் அரசு ஊராட்சி தார் சாலையில் அரசு சார்பில் மழைநீர் வெளியேற பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை தனியார் ஒருவர் அடைத்து விட்டார். மழைக்காலங்களில் மழைநீர் செல்ல முடியாமல் வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. எனவே பாலத்தை அடைத்தவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து நீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். சாமளாபுரத்தில் ஆதிதிராவிட குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ள அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் அளித்த மனுவில், ‘சாமளாபுரத்தில் ஆதிதிராவிட மக்கள் குடியிருப்புகளை அகற்றுவதற்கு நீர்வளத்துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். குளத்து நீரால் பாதிப்பு இல்லை என்ற போதிலும் நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு நிலத்தை வகைமாற்றம் செய்து வழங்க வேண்டும். பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்திய பிறகும் குடியிருப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர். அப்பகுதி குடியிருப்புகளை அகற்றக்கூடாது’ என்று கூறியுள்ளனர்.
திருப்பூர் மண்ணரை பகுதியை சேர்ந்த மூதாட்டிகள் அளித்த மனுவில், ‘கைரேகை பதிவு விழாததால் முதியோர் உதவித்தொகைக்கான பணம் பெறுவதில் சிரமம் உள்ளது. இதனால் கைரேகை பதிவை புதுப்பித்து வழங்கி எங்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story