பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளியால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் வேடபட்டி பகுதியை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ்குமார் (வயது 45). மாற்றுத்திறனாளி. இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மைக்கேல் ராஜ்குமார் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று இவர், ஸ்கூட்டரில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காலையில் இருந்தே பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
எனவே ஸ்கூட்டரில் வந்த மாற்றுத்திறனாளியும் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்திருப்பார் என்று போலீசார் நினைத்தனர். ஆனால் அவர் திடீரென, ஸ்கூட்டரில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த போலீசார் ஓடிச்சென்று அவரை தடுத்தனர். பின்னர் அவர் மீது போலீசார் தண்ணீரை ஊற்றினர். அதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
மின் இணைப்பு
அப்போது வேடப்பட்டி பகுதியில் ஆவின் பாலகம் அமைக்க மாவட்ட நிர்வாகம் மூலம் அனுமதி பெற்றேன். மேலும் ஆவின் பாலகம் நடத்துவதற்கான உபகரணங்கள் வாங்குவதற்காக வங்கியில் கடன் பெற்று பொருட்களை வாங்கினேன். அதைத்தொடர்ந்து ஆவின் பாலகத்துக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மின்வாரியத்தில் விண்ணப்பித்தேன். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பலனில்லை. வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. எனவே தான் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றேன் என்றார். இதையடுத்து போலீசார், கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் மனுகொடுக்கும்படி அறிவுறுத்தினர். அதன்படி அவர் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
பரபரப்பு
அதைத்தொடர்ந்து அவரை விசாரணைக்காக தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச்சென்றனர். கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story