தியாகதுருகம் அருகே புதிய அங்கன்வாடி மையம் பொதுமக்கள் கோரிக்கை
தியாகதுருகம் அருகே புதிய அங்கன்வாடி மையம் பொதுமக்கள் கோரிக்கை
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் அருகே வடபூண்டி கிராமத்தில் ஊர் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சுமார் 1½ கிலோ மீட்டர் தூரத்தில் வட பூண்டி காலனி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட சுமார் 20 குழந்தைகள் உள்ளனர். மேலும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் 15-க்கும் மேற்பட்டோர் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் சத்துமாவு மற்றும் இணை உணவு உள்ளிட்டவைகளை பெறுவதற்காக சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் நடந்து ஊர்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு வர வேண்டிய அவல நிலை உள்ளது.
வெயில் மற்றும் மழைக்காலங்களில் குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்புவதில்லை என கூறப்படுகிறது. சாலையில் வாகன போக்குவரத்து இருப்பதால் எங்கே குழந்தைகள் விபத்தில் சிக்கிக்கொள்வார்களோ என்ற அச்சத்தினால் பெற்றோர் தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர். இதனால் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் குழந்தைகளின் உயரத்துக்கு ஏற்ப எடை இருக்க வேண்டும், ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்கின்ற நோக்கம் சிதைந்து போகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு வடபூண்டி காலனி பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story