திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் 3 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
சாராய வழக்கில் கணவருக்கு ஜாமீன் கிடைக்காததால் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் 3 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர்
சாராய வழக்கில் கணவருக்கு ஜாமீன் கிடைக்காததால் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் 3 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்வு நாள் கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மனுக்கொடுக்க ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் வந்து இருந்தனர். அவர்கள் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடன் உதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் கொடுத்தனர்.
மொத்தம் 383 பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
3 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி
வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை (வயது 30). இவர் தனது குழந்தைகள் பூஜா (8), கிஷோர் (7), திலீபன் (5) ஆகியோருடன் கலெக்டரிடம் மனுக்கொடுக்க வந்தார். மனு கொடுப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை தனது குழந்தைகள் மீதும், தனது உடலிலும் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும், அதிகாரிகளும் மணிமேகலையிடம் இருந்து மண்எண்ணெயை பறிமுதல் செய்து, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் மணிமேகலையின் கணவர் முருகன் (32) என்பவரை வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் நடந்த கோவில் திருவிழா தகராறில் போலீசார் அழைத்து சென்று சாராய வழக்கில் கைது செய்து உள்ளதாகவும், அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை எனவும், வருமானம் இல்லாததால் குழந்தைகளை காப்பாற்ற வழிதெரியவில்லை எனவும் இதன் காரணமாக தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் மணிமேகலையை திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
மாற்று இடம்கேட்டு மனு
இதேபோல் உதயேந்திரம் பேரூராட்சியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் தாங்கள் ஏரிக்கரையோரம் வசிப்பதாகவும் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும் மனு அளித்தனர்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.56 ஆயிரம் மதிப்பில் தையல் எந்திரம், சக்கர நாற்காலி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பானுமதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story