ராசிபுரம் அருகே சிவசுப்பிரமணியர் சாமி கோவிலில் மதநல்லிணக்க நிகழ்ச்சி-இந்து, முஸ்லிம்கள் சந்தனம் பூசி கொண்டனர்
ராசிபுரம் அருகே குருசாமிபாளையம் சிவசுப்பிரமணியர் சாமி கோவிலில் மதநல்லிணக்க நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி இந்து, முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சந்தனம் பூசி கொண்டனர்.
ராசிபுரம்:
மதநல்லிணக்க நிகழ்ச்சி
ராசிபுரம் அருகே குருசாமிபாளையத்தில் பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணியர் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 9-ந் தேதி விநாயகர் பூஜை, கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 10-ந் தேதி கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி தினந்தோறும் சாமி ஊர்வலம் நடந்தது. நாடகம், பட்டிமன்றம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கடந்த 18-ந் தேதி சாமி திருக்கல்யாண நிகழ்ச்சி மற்றும் தேரோட்டம் நடந்தது. நேற்று மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி, சாமி ஊர்வலம் நடந்தது.
இதைத்தொடர்ந்து கோவிலில் இந்துக்கள், முஸ்லிம்கள் ஒன்றுகூடி சந்தனம் பூசும் மதநல்லிணக்க நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ராசிபுரத்தில் உள்ள கிழக்கு பள்ளிவாசல் முத்தவல்லி உசேன், துணைத்தலைவர் காதர் பாஷா, நிர்வாகிகள் சித்திக் அலி, கண்ணுபா, இமா சிக்கந்தர், இப்ராகிம் மற்றும் முஸ்லிம்கள், வெள்ளை கொடியை பிடித்தவாறு தேங்காய், பழம், பூக்கள் அடங்கிய தாம்பூளத்தட்டுடன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை ஊர் பெரிய தனக்காரர் ராஜேந்திரன், கோவில் நிர்வாகிகள் மற்றும் ஆண், பெண் பக்தர்கள் வரவேற்றனர்.
118 ஆண்டுகளாக...
இதையடுத்து முஸ்லிம்கள் கோவில் வளாகத்திலும், வீடுகளிலும் சந்தனம் பூசினர். பின்னர் சந்தைபேட்டை மைதானத்தில் உள்ள கொடி மரத்தில் வெள்ளை கொடியை ஏற்றி, சந்தனம் பூசினர். தொடர்ந்து இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சந்தனம் பூசி கொண்டனர். பின்னர் அனைவரும் நலமாக இருக்க துவா ஓதி பிரார்த்தனை செய்யப்பட்டது. முடிவில் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது.
முன்பு ஒரு காலத்தில் குருசாமிபாளையத்தில் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு பலர் இறந்ததாகவும், அப்போது முஸ்லிம்கள் துவா ஓதி நோய் தன்மையை குறைத்ததால், சந்தனம் பூசும் மதநல்லிணக்க நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சி 118 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story