சிப்காட் அமைக்க எதிர்ப்பு விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்
சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மனு கொடுக்கும் போராட்டம்
ஓசூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்படும் விவசாயிகள் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. போராட்டத்தின் போது மாநில பொதுச்செயலாளர் சண்முகம், மாவட்ட செயலாளர்கள் சேகர், பிரகாஷ் ஆகியோர் பேசினர். முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு தலைமை தாங்கி பேசியதாவது:-
சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி பகுதியில், ஓசூர் 5-வது சிப்காட் வளாகம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த வருவாய்த்துறை மூலம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தனப்பள்ளி, அயரனப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் 3 ஆயிரத்து 34 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வருவாய்த்துறை அதிகாரிகள் கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர். 3 ஊராட்சிகளிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
கைவிட வேண்டும்
இந்த 3 ஊராட்சிகளிலும் 1,500 மின் இணைப்பு, 5 ஆயிரம் தென்னை மற்றும் மா மரங்கள், 25 கோழிப்பண்ணைகள், 50 பசுமை குடில்கள் 15-க்கும் மேற்பட்ட ஏரிகள், அதற்கான நீர் வழித்தடங்கள் அமைந்துள்ளன. சிப்காட் அமைக்க உள்ள இடத்தில் 3 போக சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது.
இதில் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. ஏற்கனவே ஓசூரில் சிப்காட், 3 மற்றும் 4 அமைக்க நிலம் கையகப்படுத்தியதில், 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பயன்பாடின்றி உள்ளது. எனவே வேளாண் நிலங்களில் சிப்காட் அமைக்க கையகப்படுத்தும் முயற்சியை அரசு முழுமையாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story