விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்க ‘ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் நகையை பறித்தோம்' கைதான வாலிபர்கள் போலீசில் வாக்குமூலம்


விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்க ‘ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் நகையை பறித்தோம் கைதான வாலிபர்கள் போலீசில் வாக்குமூலம்
x
தினத்தந்தி 21 March 2022 11:04 PM IST (Updated: 21 March 2022 11:04 PM IST)
t-max-icont-min-icon

விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆசையில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் நகையை பறித்தோம் என கைதான வாலிபர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

நாகர்கோவில் 
விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆசையில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் நகையை பறித்தோம் என கைதான வாலிபர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஆசிரியையிடம் நகை பறிப்பு
நாகர்கோவில் கீழ ஆசாரிபள்ளத்தை சேர்ந்தவர் மரிய செல்வி (வயது 72), ஓய்வு பெற்ற ஆசிரியை. சம்பவத்தன்று மரிய செல்வி பிரார்த்தனை செய்வதற்காக அங்குள்ள ஆலயத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் மரிய செல்வியை வழிமறித்து கழுத்தில் கிடந்த 6¼ பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்களை தேடி வந்தனர். 
வாலிபர்கள் கைது
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் ஆசாரிபள்ளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் மேலஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த சேவியர் வின்ஸ்லின் (24), ஸ்டாலின் (25) என்பதும், ஓய்வு பெற்ற ஆசிரியை மரிய செல்வியிடம் நகை பறித்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 
வாக்குமூலம்
இதற்கிடையே கைதான வாலிபர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் இருவரும் நண்பர்கள். தற்போது வேலை இல்லாமல் இருந்து வந்தோம். இதனால் செலவுக்கு பணம் தேவைப்பட்டது. மேலும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் வாங்க ஆசைப்பட்டோம். இதனால் நகை பறிப்பில் ஈடுபட முயன்றோம். இதற்காக மரிய செல்வியை குறி வைத்தோம். அவரை ஒரு வாரகாலம் கண்காணித்து நகையை பறித்தோம். ஆனால் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து எங்களை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story