மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி


மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி
x
தினத்தந்தி 21 March 2022 11:13 PM IST (Updated: 21 March 2022 11:13 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலியானார். டிரான்ஸ்பார்மரில் ஏறி பியூஸ் போட முயன்றபோது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திண்டிவனம், 

திண்டிவனம் அருகே உள்ள சாரம் கிராமம் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் விநாயகம் மகன் அரவிந்தன்(வயது 35). மின் ஊழியர். திருமணமாகவில்லை. இவர் நேற்று முன்தினம் இரவு சாரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணியில் இருந்தார். 
இந்த நிலையில் பாதிரி பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பாதிரி பெட்ரோல் பங்க் மேலாளர் ராஜராஜன், மின்வாரிய அலுவலகத்துக்கு நேரில் சென்று தகவல் கூறினார். 

மின்சாரம் தாக்கி பலி 

இதையடுத்து அரவிந்தன், டிரான்ஸ்பார்மருக்கு சென்று பார்வையிட்டார். அங்கு பியூஸ் போய் இருந்தது. எனவே அந்த பியூஸ் போடுவதற்காக டிரான்ஸ்பார்மரை ஆப் செய்தார். 
பின்னர் அவர், டிரான்ஸ்பார்மரில் ஏறி பியூஸ் போட முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கியதில் அரவிந்தன் டிரான்ஸ்பார்மரிலேயே பலியானார். இது பற்றி தகவல் அறிந்ததும் ஒலக்கூர் போலீசாரும், மின் ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது, அரவிந்தன் சரியாக டிரான்ஸ்பார்மரை ஆப் செய்யாததால் மின்சாரம் தாக்கி பலியானது தெரியவந்தது. 

போலீசார் விசாரணை 

இதையடுத்து டிரான்ஸ்பார்மரை முழுமையாக ஆப் செய்து, அரவிந்தனின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக இளமின்பொறியாளர் சிவா கொடுத்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
அரவிந்தனின் தந்தை விநாயகமும் மின்வாரியத்தில் ஊழியராக பணிபுரிந்தவர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்தபோதே விநாயகம் இறந்ததால், கருணை அடிப்படையில் அரவிந்தனுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் மின்வாரியத்தில் வேலை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story