ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.
சிவகங்கை,
ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.
குறை தீர்க்கும் கூட்டம்
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர், மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் உள்ளிட்ட 310 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் 9 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்களையும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் கல்வி மற்றும் மருத்துவ உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 31 குழந்தைகளுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டது.
நிதியுதவி
கொரோனா நோய்த்தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த 1 குழந்தைக்கு தமிழக முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதியில் இருந்து ரூ.5,லட்சம் உதவித்தொகையும், மற்றொரு குழந்தைக்கு ரூ.3 லட்சம் உதவி தொகையும் கலெக்டர் வழங்கினார்.
மேலும், வெளிநாட்டில் பணிபுரிந்து பணியின் போது உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சத்து 68 ஆயிரத்து 921-க்கு உதவித்தொகையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஆவின் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்திட தலா ரூ.50 ஆயிரம் வீதம் 6 பேருக்கு உதவித்தொகையும், நீரில் மூழ்கி உயிரிழந்த சோமநாதமங்களம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் குடும்பத்தினருக்கு ரூ.1,லட்சம் உதவித்தொகையும் கலெக்டர் வழங்கினார்.
மேலும், சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.ஆயிரம் ஓய்வூதியம் பெறும் வகையில், இளையான்குடி வட்டத்தைச் சேர்ந்த 7 பேருக்கு முதியோர் ஒய்வூதியம் பெறுவதற்கான ஆணையினையும், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா நலவாரியத்தின் கீழ் பதிவு பெற்ற 10 பேருக்கு மாதந்தோறும் 1,000 ஓய்வூதியம் பெறும் ஆணையினையும் கலெக்டர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story