கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை-அறிவியல் மகளிர் கல்லூரியில் 13-வது பட்டமளிப்பு விழா
ஸ்ரீ பாரதி கலை-அறிவியல் மகளிர் கல்லூரியில் 13-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 13-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். தாளாளர் லியோ பெலிக்ஸ் லூயிஸ் முன்னிலை வகித்தார். அறங்காவலர் உறுப்பினர்கள் சரவணன், கிருஷ்ணமூர்த்தி, பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், இன்றைக்கு எல்லாவற்றிலும் பெண்கள் என்கின்ற நிலைமைக்கு நம்முடைய சமூகம் மெல்ல, மெல்ல வந்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மக்கள் தொகையில் 50 சதவீதம் பெண்கள் தான் இருக்கிறார்கள். ஆகவே ஒவ்வொன்றாக சட்டப்பூர்வமாகவும் சரி, சமுதாயம் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையிலும் சரி பெண்களுக்கு எல்லாவற்றிலும் சமபங்கு வழங்க வேண்டும் என்கிற நிலைமை இப்போது வந்துள்ளது. அத்தனை வேலை வாய்ப்புகளிலும் கட்டாயம் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதை 40 சதவீதமாக உயர்த்த அறிவிப்புகள் வர இருக்கின்றன என்றார். முன்னதாக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகையும், சிறப்பு பரிசும் வழங்கப்பட்டன. இளங்கலைப்பிரிவில் 664 பேருக்கும், முதுகலைப்பிரிவில் 58 பேருக்கும், ஆய்வியல் நிறைஞர் பாடப்பிரிவில் 19 பேரும் என மொத்தமாக 741 மாணவிகள் பட்டம் பெற்றனர். நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் கவிதா பட்டமளிப்பு அறிக்கையை சமர்ப்பித்தார். முடிவில் இயக்குனர் குமுதா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story