அடிப்படை வசதிகள் குறித்த மனுக்களுக்கு உடனடி தீர்வு காணவேண்டும்


அடிப்படை வசதிகள் குறித்த மனுக்களுக்கு உடனடி தீர்வு காணவேண்டும்
x
தினத்தந்தி 22 March 2022 12:21 AM IST (Updated: 22 March 2022 12:21 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதிகள் குறித்த மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர், 

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 480 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், அந்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார். அப்போது கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத் சிங், தனித்துணை ஆட்சியர் கற்பகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாணவ-மாணவிகள்

முன்னதாக பண்ருட்டி அருகே களத்துமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதி பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பண்ருட்டி நகராட்சி 26-வது வார்டு களத்துமேடு பகுதியில் வசிக்கும் நாங்கள், ஏரியை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதாகவும், அதனால் வீடுகளை தாங்களே காலி செய்ய வேண்டும் எனவும் நகராட்சி சார்பில் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. அதனால் எங்களுக்கு மாற்று இடமும், இலவச மனை பட்டாவும் வழங்க வேண்டும். மேலும் வீடுகளை காலி செய்வதற்கு, இப்பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் பள்ளிகளில் ஆண்டு இறுதிதேர்வு எழுதும் வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள்

இதேபோல் தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் கொடுத்த மனுவில், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் நெல் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், ஆண்டு கணக்கில் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யாமல் ஏமாற்றி வருகின்றனர். அதனால் இனி வருங்காலங்களில் நெல் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ரசீது வழங்கி விட்டு, கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் பணம் பட்டுவாடா செய்யாமல் மோசடி செய்துள்ள வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Next Story