ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 March 2022 1:47 AM IST (Updated: 22 March 2022 1:47 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் புகையிலை கம்பெனியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து மேற்பார்வையாளரை கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர்:
தஞ்சையில் புகையிலை கம்பெனியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து மேற்பார்வையாளரை கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
புகையிலை
தஞ்சை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கவும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்யவும் போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தஞ்சை அபிராமபுரம் பகுதியில் ஒரு புகையிலை கம்பெனியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்தவுடன் அங்கு இருந்தவர்கள் தப்பி ஓட முயற்சி செய்தனர்.
பறிமுதல்
ஆனால் அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். இதில் ஒருவர் மட்டுமே போலீசாரிடம் பிடிபட்டார். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அந்த குடோனில் போலீசார் சோதனை செய்தபோது அங்கே புகையிலை பொருட்கள் அதிகஅளவில் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 93 மூட்டைகளில் இருந்த 1,116 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 750 ஆகும்.
இது தொடர்பாக மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தஞ்சை தேவன்நகரை சேர்ந்த மேற்பார்வையாளர் முருகேசன் (வயது55) என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story