நெல்ைல அருகே பயங்கரம் கல்லூரி மாணவர் குத்திக்கொலை நண்பர் உள்பட 2 பேர் கைது


நெல்ைல அருகே பயங்கரம் கல்லூரி மாணவர் குத்திக்கொலை நண்பர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 March 2022 1:57 AM IST (Updated: 22 March 2022 1:57 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே கல்லூரி மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்டார்

பனவடலிசத்திரம்:
நெல்லை அருகே கல்லூரி மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கல்லூரி மாணவர்
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள கூவாச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குட்டி. இவரது மகன் அசோக் (வயது 19). இவர் ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வந்தார்.
அதே ஊரைச் சேர்ந்தவர் அழகுதுரை மகன் மருதுபாண்டி (21). இவர் கூவாச்சிப்பட்டியைச் சேர்ந்த ஒருவர் கேரளாவில் நடத்தி வரும் இரும்பு கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அசோக், மருதுபாண்டி ஆகியோர் நண்பர்கள் ஆவார்கள்.
குத்திக்கொலை
இந்த நிலையில் பங்குனி உத்திரம், கோவில் கொடை விழாவை முன்னிட்டு மருதுபாண்டி ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவில் அசோக், மருதுபாண்டி, அவரது நண்பரான சுரண்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் சபரிசெல்வம் (21) ஆகியோர் கூவாச்சிப்பட்டி கிறிஸ்தவ ஆலயம் அருகே பேசிக் கொண்டு இருந்தனர்.
அப்போது, அவர்களுக்கு இடையே திடீரென்று வாய் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த மருதுபாண்டி, சபரிசெல்வம் ஆகியோர் அசோக்கை கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அசோக் பரிதாபமாக இறந்தார்.
2 பேர் கைது
இதுகுறித்து உடனடியாக தேவர்குளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், தேவர்குளம் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அசோக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மருதுபாண்டி, சபரிசெல்வம் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரபரப்பு
மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாமல் இருக்க அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
நெல்லை அருேக கல்லூரி மாணவர் குத்திக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story