ஜல்லிக்கற்களுடன் வந்த லாரியை மறித்து போராட்டம்; 10 பேர் மீது வழக்கு
ஜல்லிக்கற்களுடன் வந்த லாரியை மறித்து போராட்டம் நடத்தியது தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தா.பழூர்:
போராட்டம்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தில் இருந்து ஆயுதக்களம் செல்வதற்கு தார் சாலை அமைக்க ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி சாலையோர பகுதிகளில் கருங்கல் ஜல்லிகள் கொட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சாலையில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலை பணிகள் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டி நேற்று முன்தினம் மாலை சிலர் ஜல்லிக்கற்கள் கொட்ட வந்த லாரியை மறித்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தா.பழூர் போலீசார் லாரியை மறித்தவர்களை அப்புறப்படுத்தினர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை பணி செய்ய வேண்டுமென்றால் உரிய அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டுமே தவிர, பணியில் ஈடுபடும் லாரி போன்ற வாகனங்களை மறித்து போராட்டம் நடத்தக்கூடாது என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
10 பேர் மீது வழக்கு
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட உதயநத்தம் வடக்கு தெருவை சேர்ந்த சுதாகர்(வயது 28), ராஜா(31), மணிவண்ணன்(25), கமலக்கண்ணன்(31), சக்திவேல்(36), ஞானசுந்தரம்(32), பாலமுருகன்(43), தங்கராசு(32), முருகன்(35), ரகுபதி(40) ஆகியோர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகவும், அரசுப் பணியில் ஈடுபட்டிருந்த வாகனத்தை தடுத்து நிறுத்தியதாகவும், சட்டவிரோதமாக ஒன்று கூடியதாகவும், கொரோனா தொற்று பரப்பும் வகையில் கூடியதாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story