ஆட்டுக்குட்டிகளுடன் நட்பு பாராட்டும் கோழி
ஆட்டுக்குட்டிகளுடன் கோழி நட்பு பாராட்டுகிறது.
தா.பழூர்:
உலகத்தில் உள்ள ஜீவராசிகள் ஒவ்வொன்றும் அதனதன் இனத்துடன் நட்புடன் இருப்பது வழக்கமான ஒன்று. இதில் சற்று விதிவிலக்காக மனிதன் தனது வீட்டில் பசு, காளை, ஆடு, கோழி, நாய், புறா, கிளி உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை அல்லது பறவைகளை வளர்ப்பதும், அப்படி வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் மனிதன் மீது அன்பு செலுத்துவதும், அவற்றின் மீது மனிதன் அன்பு செலுத்துவதும் இயல்பானது. ஆனால் மனிதனால் வளர்க்கப்படும் வெவ்வேறு உயிரினங்கள் அவைகளுக்குள் அன்பு செலுத்தி இணைபிரியாமல் இருப்பது அரிதானதாகும். அதுபோன்ற ஒரு நிகழ்வாக அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் ஆட்டுக்குட்டிகளுடன் ஒரு கோழி எப்போதும் இணைந்து வலம் வருவது காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு;-
தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி தேன்மொழி. விவசாயிகளான இவர்கள், தங்களது வீட்டில் ஆடுகள், கோழிகளை வளர்த்து வருகின்றனர். இதில் ஒரு ஆடு கடந்த 3 மாதத்திற்கு முன்பு 3 குட்டிகளை ஈன்றது. இதையடுத்து அந்த குட்டிகளுடன், அந்த வீட்டில் வளரும் ஒரு கோழி நட்பாக இருந்து வருகிறது. ஆட்டுக்குட்டிகள் மற்றும் கோழி மேய்ச்சலுக்கு செல்லும் நேரம் தவிர மற்ற நேரத்தில் அந்த ஆட்டுக்குட்டிகளுடனேயே கோழி இருக்கிறது. அந்தநேரத்தில் ஏதாவது ஒரு ஆட்டுக்குட்டியின் மீது குஞ்சுகளை அடைகாப்பது போல் அமர்ந்து கொள்கிறது. ஆட்டுக்குட்டிகள் ஓய்வெடுக்கும்போது அவற்றின்மீது கோழி படுத்திருப்பது காண்பவர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஆட்டுக்குட்டிகள் மற்றும் கோழிக்கு இடையே இருக்கும் இந்த இணைபிரியாத நட்பு பற்றி அக்கம், பக்கத்தினர் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
Related Tags :
Next Story