ரெயிலில் செல்ல முயன்ற மாற்றுத்திறனாளிகள் நள்ளிரவில் கைது
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள ரெயிலில் செல்ல முயன்ற மாற்றுத்திறனாளிகள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.
மதுரை
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள ரெயிலில் செல்ல முயன்ற மாற்றுத்திறனாளிகள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.
மாற்றுத்திறனாளிகள்
தமிழ்நாடு மாநில மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழிலகம் முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சங்கத்தின் உறுப்பினர்கள் சென்னை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், மதுரை மாநகராட்சி கவுன்சிலரும், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் மாவட்ட செயலாளருமான குமாரவேல் தலைமையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சென்னை செல்வதற்காக நேற்று இரவு மதுரை ரெயில் நிலையம் வந்தனர். அவர்களை திடீரென்று ரெயில் நிலைய வளாகத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் ரெயில் நிலைய வளாகத்தில் தர்ணா செய்தனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிம்மக்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
அப்போது, மாற்றுத்திறனாளிகளை வழியனுப்ப வந்த புறநகர் மாவட்ட செயலாளர் முருகன், பெண் மாற்றுத்திறனாளிகள் 5 பேர் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
பரபரப்பு
இதுகுறித்து, செயலாளர் குமாரவேல் கூறும்போது, தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500 தருவதாக தெரிவித்தது. தற்போது வரை வழங்கப்படவில்லை. மிகவும் மோசமான நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதனை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மாற்றுத்திறனாளிகள் நல கமிஷனர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தோம் ஆனால், போலீசார் எங்களை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்துள்ளனர் என்றார். இந்த சம்பவத்தால் நேற்று இரவு மதுரை ரெயில் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story