64 பவுன் நகை மாயம்
மதுரையில் நிதி நிறுவனத்தில் 64 பவுன் நகை மாயம்
மதுரை
மதுரை மணிநகரம் வ.உ.சி. தெருவில் தனியார் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். சம்பவத்தன்று நிறுவனத்தில் உள்ள கணக்கு வழக்குகளை அந்த நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கணக்கில் இருந்த சுமார் 64 பவுன் நகைகள் இருப்பில் இல்லாமல் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அங்கு வேலை பார்க்கும் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் நிதி நிறுவன அதிகாரி நிர்மலாதேவி இது குறித்து திலகர்திடல் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் 64 பவுன் காணவில்லை என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதே நேரத்தில் பணிக்கு வராமல் இருந்த அதே பகுதியை சேர்ந்த காளிதாஸ்(வயது 33) குறித்து அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவரிடம் அலுவலகத்தில் இருந்து போன் மூலம் கேட்ட போது நெல்லையில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று இருப்பதாக தெரிவித்தார். உடனே அவரை அலுவலகத்திற்கு வருமாறு அதிகாரிகள் கூறினார்.
அவரும் கோவிலில் இருந்து வந்த உடன் அலுவலகத்திற்கு வந்து விடுவதாக தெரிவித்தார். இதற்கிடையில் வேலை செல்வதாக கூறி சென்ற காளிதாசை காணவில்லை என்று அவரது மனைவி திலகர்திடல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர். எனவே அவர் கிடைத்தால் தான் நிறுவனத்தில் மாயமான நகை குறித்து தெரியவரும் என்று போலீசார் கூறினர்.
Related Tags :
Next Story