தமிழக அரசு, மேகதாது திட்டத்திற்கு எதிராக நிறைவேற்றியுள்ள தீர்மானத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கண்டனம்
தமிழக அரசு, மேகதாது திட்டத்திற்கு எதிராக நிறைவேற்றியுள்ள தீர்மானத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார். உபரி நீரை பயன்படுத்த கர்நாடகத்திற்கு உரிமை உள்ளதாக அவர் கூறியுள்ளார்
பெங்களூரு: தமிழக அரசு, மேகதாது திட்டத்திற்கு எதிராக நிறைவேற்றியுள்ள தீர்மானத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார். உபரி நீரை பயன்படுத்த கர்நாடகத்திற்கு உரிமை உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தீர்மானம் சட்ட விரோதமானது
தமிழக அரசு, சட்டசபையில் கர்நாடக அரசின் மேகதாது திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதற்கு கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டசபையில் இன்று (அதாவது நேற்று) மேகதாது திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் சட்டவிரோதமானது. இது ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்தின் உரிமையை ஆக்கிரமித்து கொள்ளும் வகையிலான மக்கள் விரோத தீர்மானமாகும். கூட்டாட்சி தத்துவத்தில் தமிழ்நாட்டிற்கு நம்பிக்கை இல்லாத தீர்மானம் இதுவாகும். இந்த தீர்மானத்தை கர்நாடக மக்கள் மற்றும் மாநில அரசு வன்மையாக கண்டிக்கிறது. மேகதாது திட்டத்தை செயல்படுத்த அரசு உறுதியாக உள்ளது.
கர்நாடகத்திற்கு உரிமை
மேகதாது திட்டம் கர்நாடகத்தில் பிறக்கும் காவிரி ஆற்றுக்கு சம்பந்தமானது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு 177.25 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீரை கொடுத்தபிறகு உபரியாக உள்ள நீரை பயன்படுத்த கர்நாடகத்திற்கு உரிமை உள்ளது.
தமிழ்நாட்டின் இந்த அரசியல் தீர்மானத்தை பற்றி கவலைப்படாமல் மேகதாது திட்டத்தை செயல்படுத்த அரசு எல்லா ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story