பெங்களூருவில் பரிதாபம் மாநகராட்சி குப்பை லாரி மோதி பள்ளி மாணவி சாவு
பெங்களூருவில் சாலையை கடந்து சென்ற மாநகராட்சி குப்பை லாரி மோதி பள்ளி மாணவி பலியானாள். மேலும் ஒரு பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். லாரி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுரங்க நடைபாதையில் தண்ணீர் தேங்கி நின்றதால் இந்த விபரீதம் நடந்துள்ளது
பெங்களூரு: பெங்களூருவில் சாலையை கடந்து சென்ற மாநகராட்சி குப்பை லாரி மோதி பள்ளி மாணவி பலியானாள். மேலும் ஒரு பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். லாரி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுரங்க நடைபாதையில் தண்ணீர் தேங்கி நின்றதால் இந்த விபரீதம் நடந்துள்ளது.
மாநகராட்சி குப்பை லாரி
பெங்களூரு ஹெப்பால் அருகே வசித்து வருபவர் நரசிம்மமூர்த்தி. இவருடைய மகள் அக்சயா(வயது 14). இந்த சிறுமி தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். அதே பள்ளியில் அக்சயாவின் சகோதரி சந்தியாவும் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று பள்ளியில் தேர்வு நடந்தது. அந்த தேர்வை எழுதுவதற்காக வீட்டில் இருந்து அக்சயா தனது சகோதரியுடன் பஸ்சில் பள்ளிக்கு சென்றிருந்தாள். தேர்வு எழுதி முடித்துவிட்டு மதியம் 1 மணியளவில் அரசு பஸ்சில் சகோதரிகள் ஹெப்பாலுக்கு வந்தனர்.
ஹெப்பால் போலீஸ் நிலையம் அருகே இருக்கும் மேம்பாலத்தையொட்டி உள்ள சாலையை அக்சயா, சந்தியா உள்ளிட்ட சிலர் கடந்து செல்ல முயன்றார்கள். அந்த சந்தர்ப்பத்தில் அதே சாலையில் வந்த மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை லாரி திடீரென்று பாதசாரிகள் மீதும், ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீதும் மோதி சங்கிலி தொடர் விபத்தை ஏற்படுத்தியது.
பள்ளி மாணவி சாவு
லாரி மோதிய வேகத்தில் அக்சயா மற்றும் சவுமியா(28) ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டார்கள். மேலும் மோட்டார் சைக்கிளில் சென்ற விகாஷ்(40) என்பவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிய மாணவி அக்சயா உள்ளிட்ட 3 பேரையும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவி அக்சயாவை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து, சவுமியா, விகாசுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்ததும் ஹெப்பால் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாாிகள் விபத்து நடந்த பகுதிக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவி அக்சயாவின் உடலையும் கைப்பற்றி விசாரித்தனர்.
சுரங்க நடைபாதையில் தண்ணீர்
அப்போது ஹெப்பால் போலீஸ் நிலையம் அருகே உள்ள சுரங்க நடைபாதையில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி நின்றுள்ளது. அந்த தண்ணீர் அகற்றப்படாததால், மாணவி அக்சயா தனது சகோதரியுடன் சாலையை கடந்து செல்ல முயற்சித்துள்ளார். அப்போது விபத்தில் சிக்கி அக்சயா பலியானது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து நடந்த பின்பு மாநகராட்சி அதிகாரிகள், சுரங்க நடைபாதையில் தேங்கி நின்ற தண்ணீரை வெளியேற்றிவிட்டு பாதசாரிகள் நடந்து செல்ல ஏற்பாடுகள் செய்தார்கள்.இதுகுறித்து ஹெப்பால் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் மஞ்சுநாத்தை கைது செய்தனர். மாநகராட்சியின் குப்பை லாரியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story