எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சியில் பன்றிகளை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு கோர்ட்டு உத்தரவு


எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சியில் பன்றிகளை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 22 March 2022 3:47 AM IST (Updated: 22 March 2022 3:47 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சியில் பன்றிகளை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சேலம்:
சேலம் அருகே உள்ள எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சியை சேர்ந்த அங்கமுத்து என்பவர் கடந்த 8-ந் தேதி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் புகார் மனு கொடுத்தார். அதில், எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சி கைபுதூரில் பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. அங்குள்ள தொடக்கப்பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் அருகே அதிகமான பன்றிகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. கூட்டம், கூட்டமாக பன்றிகள் சுற்றித்திரிவதால் மாணவ, மாணவிகள் அச்சமடைந்து வருகின்றனர். குறிப்பாக பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் அதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், நீதிபதியுமான ஆபிரகாம் லிங்கன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை நீதிபதி பிறப்பித்துள்ளார். அதன்படி, பன்றிகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக பன்றி வளர்ப்பவர்கள் மீது ஊர்பொதுமக்கள் யாரேனும் புகார் செய்தால் அதன் மீது ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் உடனடியாக குற்றவியல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
யாருடைய மேற்பார்வையும் இல்லாமல் பொது இடங்களில் சுற்றித்திரியும் பன்றிகளை வனச்சரக அலுவலரை கொண்டு வீரபாண்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுஇடங்களிலும், வீட்டுக்குள்ளும் புகுந்து பன்றிகள் தொல்லை செய்வதை ஆட்டையாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் முழுவதுமாக கட்டுப்படுத்தி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி ஆபிரகாம்லிங்கன் கூறி உள்ளார்.

Next Story