யானை தந்தம், மான் கொம்பு வைத்திருந்ததாக புகார்: சேலத்தில் நரிக்குறவர் கைது; 5 பேருக்கு அபராதம்


யானை தந்தம், மான் கொம்பு வைத்திருந்ததாக புகார்: சேலத்தில் நரிக்குறவர் கைது; 5 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 22 March 2022 4:08 AM IST (Updated: 22 March 2022 4:08 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் யானை தந்தம், மான் கொம்பு வைத்திருந்த புகாரில் நரிக்குறவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 5 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம்:
சேலத்தில் யானை தந்தம், மான் கொம்பு வைத்திருந்த புகாரில் நரிக்குறவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 5 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
விசாரணை
சேலத்தில் ஒரு நகைக்கடையில் யானை தந்தம், மான் கொம்பு, புலி நகம் ஆகியவைகளை பயன்படுத்தி தங்க நகை ஆபரணங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில் சென்னை வனபாதுகாப்பு மற்றும் வனவிலங்குகள் குற்றப்பிரிவு உதவி வனபாதுகாவலர் மகேந்திரன், சேலம் சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் சின்னத்தம்பி மற்றும் வனத்துறையினர் நேற்று முன்தினம் சேலத்தில் சம்பந்தப்பட்ட நகைக்கடைக்கு சென்று விசாரித்தனர்.
அப்போது, அங்கு இருந்த நகைகளை வாங்கி பார்த்தபோது, யானை தந்தம், மான் கொம்பு, நரி நகம் போன்றவை பயன்படுத்தி நகைகள் தயாரித்து விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நகைக்கடைக்காரரையும், அவருக்கு உடந்தையாக இருந்த நரிக்குறவர் உள்பட 3 பேரையும் பிடித்து சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்று வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்களிடம் 2 யானை தந்தம், 2 மான் கொம்பு, புலி நகம் மற்றும் 2 கிலோ சந்தனக்கட்டைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
நரிக்குறவர் கைது
இந்தநிலையில், யானை தந்தம், மான் கொம்பு ஆகியவற்றை வைத்திருந்த புகாரில் சேலம் பஞ்சதாங்கி ஏரியை சேர்ந்த நரிக்குறவர் ஜெபமந்திரி (வயது 39) என்பவரை நேற்று வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், இதற்கு உடைந்தாக இருந்ததற்காக பொன்னாம்மாபேட்டையை சேர்ந்த மோகனகாந்திக்கு ரூ.1 லட்சமும், சேலத்தை சேர்ந்த நந்தகுமார், வெங்கட்பிரபு ஆகியோருக்கு தலா ரூ.40 ஆயிரமும், நகைக்கடைக்காரர் ெசந்தில்குமார், அவருடைய நண்பர் குமரேசன் ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதனிடையே, சேலத்தில் யானை தந்தம், மான் கொம்பு, புலி பல், நரி நகம் ஆகியவை விற்கும் கும்பலுடன் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story