கூகுள் பே மூலம் ரூ.500 கடன் வாங்கி நண்பனை ஏமாற்றி 9 பவுன் நகை பறித்த வாலிபர் கைது


கூகுள் பே மூலம் ரூ.500 கடன் வாங்கி நண்பனை ஏமாற்றி 9 பவுன் நகை பறித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 March 2022 4:13 AM IST (Updated: 22 March 2022 4:13 AM IST)
t-max-icont-min-icon

கூகுள் பே மூலம் ரூ.500 கடன் வாங்கி நண்பனை ஏமாற்றி 9 பவுன் நகையை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்:
சேலம் உடையாப்பட்டி பாறைக்காடு கந்தாஸ்ரமம் பகுதியை சேர்ந்தவர் வைத்தியலிங்கம். இவருடைய மனைவி சித்ரா (வயது 44). இவர்களது மகன் கிருத்திக்பாபு (22). இவரும், அம்மாபேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும் நண்பர்கள் ஆவர். 
சம்பவத்தன்று கிருத்திக்பாபுவிடம், கார்த்திகேயன் ரூ.500 கேட்டுள்ளார். மேலும், அந்த பணத்தை கூகுள் பே மூலம் வேறு ஒரு எண்ணிற்கு அனுப்பி வைக்குமாறு கூறினார். அதன்படி அந்த எண்ணுக்கு கிருத்திக்பாபு பணத்தை அனுப்பினார். ஆனால் அவர் அனுப்பிய பணம் ஒரு பெண்ணின் செல்போன் எண்ணுக்கு சென்றுவிட்டதாகவும், அந்த பெண் உன் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபடவும், போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க உள்ளதாகவும் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதனால் கிருத்திக்பாபு அதிர்ச்சி அடைந்தார். 
மேலும் எந்த பிரச்சினையும் வராமல் இருக்க வேண்டும் என்றால் வீட்டில் உள்ள நகைகளை எடுத்து வருமாறு கார்த்திகேயன் கூறியதால் அதை நம்பி 9 பவுன் நகைகளையும், வெள்ளி பொருட்களையும் எடுத்து வந்து கிருத்திக்பாபு கொடுத்துள்ளார். பின்னர் நகைகளுடன் கார்த்திகேயன் மாயமாகிவிட்டார்.
இதனிடையே, வீட்டில் இருந்த நகைகள் மாயமானது கண்டுஅதிர்ச்சி அடைந்த சித்ரா, இது தொடர்பாக தனது மகன் கிருத்திக்பாபுவிடம் கேட்டுள்ளார். அப்போது, அவர் நடந்து விவரத்தை எடுத்து கூறியதை தொடர்ந்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் சித்ரா புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story