கூடுவாஞ்சேரி அருகே முதியவர் அரிவாளால் வெட்டிக்கொலை; சொத்து தகராறில் நடந்ததா? போலீசார் விசாரணை


கூடுவாஞ்சேரி அருகே முதியவர் அரிவாளால் வெட்டிக்கொலை; சொத்து தகராறில் நடந்ததா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 March 2022 3:16 PM IST (Updated: 22 March 2022 3:16 PM IST)
t-max-icont-min-icon

கூடுவாஞ்சேரி அருகே முதியவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கொலை

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு கூட்ரோடு பகுதியில் வசிப்பவர் உமாபதி (வயது 65). இவர் கன்னிவாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலெக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை காயரம்பேட்டில் இருந்து கன்னிவாக்கத்தில் உள்ள நிறுவனத்துக்கு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

கன்னிவாக்கம் சுடுகாடு அருகே செல்லும்போது திடீரென அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வீச்சரிவாளால் கை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் உமாபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது இறந்துபோன உமாபதிக்கும், அவரது மகன் சரவணன், ஆகியோரிடையே கடந்த சில ஆண்டுகளாக சொத்துத்தகராறு இருந்து வந்ததாக தெரியவந்துள்ளது.

சொத்து தகராறு காரணமாக தந்தையை அவரது மகன் சரவணன் வெட்டி படுகொலை செய்தாரா? என்ற கோணத்தில் போலீசாரின் முதல்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.


Next Story