ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 22 March 2022 4:45 PM IST (Updated: 22 March 2022 4:45 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. 

போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரபு, பொருளாளர் முரளி, துணைத்தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

போராட்டத்தில், சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியனின் தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்து, அவரை பணி ஓய்வில் செல்ல உரிய ஆணையை வழங்க வேண்டும். 

கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல் மற்றும் மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்கி உரிய அரசாணை வெளியிட வேண்டும். 

ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள பணி மேற்பார்வையாளர் பணியிடங்களை தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும். 

ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களின் மதிப்பீட்டு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். 

ஒன்றிய பணி மேற்பார்வையாளர் நிலையில் இருந்து உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் முதுநிலை வரை தொழில் அலுவலர் பதவி உயர்வுகளை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story