‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 22 March 2022 8:29 PM IST (Updated: 22 March 2022 8:29 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பிரச்சினைக்கு உடனடி தீர்வு

சென்னை விம்கோ நகர், சான்கோ சி.எப்.எஸ் அருகே சக்திபுரம் மெயின் ரோட்டில் இருக்கும் மின் இணைப்பு பெட்டி அருகே குடிநீர் குழாய் உடைந்து நீர் வீணாக வெளியேறுவதுடன், மின் இணைப்பு பெட்டியை சூழ்ந்து இருப்பது தொடர்பான செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து மாநகராட்சியின் உடனடி நடவடிக்கையால் சேதமடைந்த குடிநீர் குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. பிரச்சினையை விரைந்து சரி செய்த மாநகராட்சி ஊழியர்களுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் மக்கள் நன்றியை தெரிவித்தனர்.



சேதமடைந்த சாலையில் கழிவுநீருடன் போராட்டம்

சென்னை ஜமீன் பல்லாவரம் அம்பேத்கர் மெயின் ரோடு குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. மேலும் சாலையில் கழிவுநீர் அதிகளவு தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் தவறி கீழே விழுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் தேங்கிய கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் கழிவுநீரை அகற்றுவதுடன், சாலையை சீரமைத்து சீரான போக்குவரத்துக்கும் வழிவகுக்க வேண்டும்.

- சையத் ருக்னுதீன், ஜமீன் பல்லாவரம்.

சாய்ந்த மின்கம்பம் கவனிக்கப்படுமா?

சென்னை பள்ளிக்கரணை அடுத்த அன்னை இந்திரா தெருவில் இருக்கும் மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் எந்த நேரத்திலும் மின்கம்பம் சரிந்து கீழே விழும் அபாயம் இருக்கிறது. எனவே அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சாய்ந்த மின்கம்பம் சரி செய்யப்படுமா?

- ஜெகதீஷ், பள்ளிக்கரணை.



சாலையில் இடையூறாக மரக்கிளை

சென்னை வேளச்சேரி தமிழ்நாடு வீட்டுவாரிய காலனி பகுதியில் உள்ள சாலையோரம் பெரிய மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் கிளை பாம்பு போல நீண்டு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருக்கிறது. இந்த மரக்கிளையில் மோதி பலர் விபத்தில் சிக்கி காயமடைந்து உள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் பீதியிலேயே இந்த பகுதியை கடந்துசெல்ல வேண்டியிருக்கிறது. எனவே இடையூறாக இருக்கும் இந்த மரக்கிளையை அப்புறப்படுத்தினால் தேவையற்ற விபத்துக்கள் தடுக்கப்படுமே!

- ராஜாராம் பாண்டியன், வேளச்சேரி.



மின்வாரியம் நடவடிக்கை எடுக்குமா?

சென்னை திருவொற்றியூர் கலைஞர் நகர் முதல் தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டி சரிந்து கீழே விழுந்து கிடக்கிறது. இதையொட்டி உள்ள மின்கம்பம் பழுதடைந்த நிலையில் இருக்கிறது. மேலும் மின்கம்பத்தில் விளக்கும் எரிவதில்லை. இதனால் இப்பகுதியில் இரவு நேரங்களில் கடந்து செல்ல சிரமமாக உள்ளது. மின்வாரியம் கவனித்து நிரந்த தீர்வு காண வேண்டும்.

- பரந்தாமன், திருவொற்றியூர்.

பழுதடைந்த நிழற்குடை

சென்னை மணலி ஆண்டார் குப்பம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை பழுதடைந்து காணப்படுகிறது. இந்தநிலை நீண்ட நாட்களாக தொடர்கிறது. வெயில் மற்றும் மழைக்காலங்களில் பஸ் ஏற வரும் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து நிழற்குடை அமைத்து தர ஆவன செய்ய வேண்டும்.

- நவநீதன், ஆண்டார் குப்பம்.



பூட்டப்பட்ட கழிப்பறையின் பயன் என்ன?

சென்னை மேற்கு நமச்சிவாயபுரம் கருணாநிதி நகர் பகுதியில் மாநகராட்சி கழிப்பறை உள்ளது. இது நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாமல் பூட்டப்பட்ட நிலையில் பராமரிப்பின்றி கிடக்கிறது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட கழிப்பறை இவ்வாறு பூட்டப்பட்டு இருப்பதால் உபயோகப்படாமல் இருக்கும் அவலநிலை நிலவுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து பொதுமக்கள் நலன் கருதி கழிப்பறை திறக்க வழிசெய்ய வேண்டும்.

- மகேந்திரன், சமூக ஆர்வலர்.

அதிகரிக்கும் தெருநாய் தொல்லைகள்

திருவள்ளூர் மாவட்டம் சூரப்பட்டு பகுதியில் உள்ள தெருக்களில் நாய் தொல்லை அதிகரித்து வருகிறது. பள்ளிக்கு செல்லும் மாணவர்களை பார்த்து குறைப்பதும், வாகன ஓட்டிகளை துரத்துவதும் தொடர்ந்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

- சுகு, சூரப்பட்டு.

தடுப்புசுவர் அமைக்கப்படுமா?

திருவள்ளூர் ஆவடி ரெயில் நிலையம் ஒட்டிய சாலைக்கு அடியில் செல்லும் கால்வாயின் மேற்புரத்தில் தடுப்புச்சுவர் மற்றும் பாதுகாப்பு கம்பிகள் இல்லை. இதனால் வாகனத்தில் அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் தவறி கால்வாயின் உள்ளே விழுந்துவிடும் நிலையுள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக தடுப்புச்சுவர்கள் அமைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

- பாலரூபன், ஆவடி.

சாலையில் தேங்கும் குடிநீர்

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நத்தமேடு சபரி நகர் பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. வீணாக வெளியேறும் குடிநீரானது இப்பகுதியில் உள்ள மண் சாலையில் ஆங்காங்கே குளம் போல் தேங்குவதால் இந்த சாலையில் வாகனங்கள் செல்வதற்கும், பொதுமக்கள் நடப்பதற்கும் சிரமப்படுகிறார்கள். எனவே குடிநீர் குழாயை சரி செய்து வீணாக வெளியேறும் குடிநீரை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- அக்பர், நத்தமேடு.




Next Story