ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
குமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.
போராட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியனின் தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும், கிராம ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல் மற்றும் மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கும் வழங்க உரிய அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.
அதேபோல் குமரி மாவட்டத்திலும் போராட்டம் நடந்தது. இதையொட்டி நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்க மாவட்ட தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் புகழேந்தி முன்னிலை வகித்தார். பொருளாளர் தங்கராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட துணைத்தலைவர் விஜி, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஜெயஸ்ரீ, டேவிட் ஜெயசிங் ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினர். முடிவில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
வெறிச்சோடிய அலுவலகங்கள்
இந்த போராட்டத்தையொட்டி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சித்துறை அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம், மாவட்டம் முழுவதிலும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகம் ஆகியவற்றில் பணியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் இந்த அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடிக் கிடந்தது. மேலும் அலுவலக பணிகள் அனைத்தும் முடங்கின.
ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் மொத்தம் உள்ள 450 பணியாளர்களில் 350 பேர் போராட்டத்தில் பங்கேற்றதாக மாவட்டத் தலைவர் ராஜன் கூறினார்.
Related Tags :
Next Story