ஊரக வளர்ச்சி அலுவலர்கள் தர்ணா


ஊரக வளர்ச்சி அலுவலர்கள் தர்ணா
x
தினத்தந்தி 22 March 2022 9:09 PM IST (Updated: 22 March 2022 9:09 PM IST)
t-max-icont-min-icon

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி அலுவலர்கள், திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் ஓய்வுபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை ரத்து செய்ய வேண்டும். மேலும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான சலுகைகளை வழங்கி, கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை அந்த சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, மாநிலம் முழுவதும் நேற்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தர்ணா போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் மகுடபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வீரகடம்பகோபு முன்னிலை வகித்தார்.

மாநில செயலாளர் ராஜசேகர், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சுகந்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சரவணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

 இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த தர்ணா போராட்டத்தில் பங்கேற்க அலுவலர்கள் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

Next Story