நீலகிரியில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ 1000 ஐ தாண்டியது இல்லத்தரசிகள் அதிர்ச்சி
நீலகிரியில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1000-ஐ தாண்டியதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
ஊட்டி
நீலகிரியில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1000-ஐ தாண்டியதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
விலை உயர்வு
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை 137 நாட்களுக்கு பின்னர் உயர்ந்து உள்ளது. மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 103.63-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில் 75 பைசா உயர்ந்து ரூ.104.38-க்கு விற்பனையானது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூ.93.32-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
137 நாட்களுக்கு பின்னர் 76 பைசா உயர்ந்து நேற்று ரூ.94.08-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சமவெளிப் பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு கொண்டு வரப்படும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலையும், வாகனங்களில் வாடகை கட்டணமும் உயரும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.
சிலிண்டர் விலை
இது ஒருபுறம் இருக்க வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.50 உயர்த்தப்பட்டு உள்ளது. நீலகிரியில் கடந்த 5 மாதங்களாக ரூ.961.75-க்கு சமையல் சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ரூ.50 உயர்ந்து விலை ரூ.1000-ஐ தாண்டி ரூ.1,011.75 ஆக விற்பனை செய்யப்பட்டது.
ஒரே நாளில் ரூ.50 அதிகரித்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.2,148-க்கு விற்பனை செய்யப் படுகிறது. நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
திரும்ப பெற வேண்டும்
இதுகுறித்து இல்லத்தரசிகள் கூறும்போது, சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1000-ஐ கடந்ததை எதிர்பார்க்கவில்லை. மலைப்பிரதேசத்தில் சரக்கு வாகனத்தில் கொண்டு வந்து வீடுகளுக்கு வழங்க கூடுதலாக பணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
அன்றாடம் கூலி வேலை செய்துவரும் மக்கள் மற்றும் ஏழை, எளியோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story