கள்ளக்குறிச்சியில் தண்ணீரின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சியில் தண்ணீரின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி
உலக தண்ணீர் தினம்
கள்ளக்குறிச்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீரின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, ஊரக வளர்ச்சி துறை மாவட்ட திட்ட இயக்குனர் மணி, ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் கலந்துகொண்ட பள்ளி மாணவர்கள் தண்ணீரின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்து சென்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட இந்த பேரணி கச்சிராயப்பாளையம் சாலை, கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மந்தைவெளியில் முடிவடைந்தது.
செயல் விளக்கம்
தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் அன்றாடம் நம் வாழ்வில் பயன்படுத்தும் குடிநீரில் காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மையை கண்டறிவது, தர பரிசோதனை மூலம் அனைத்து ஊராட்சிகளிலும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகளில் தண்ணீரில் உள்ள தாது உப்புக்களை பரிசோதிப்பது குறித்த செயல் விளக்கம் நடைபெற்றது.
மேலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை எவ்வாறு ஏற்படுத்துவது, மழைநீர் சேகரிப்பு குறித்த ஆலோசனை பெறுவது மற்றும் குடிநீரின் அவசியம் தொடர்பான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
உறுதி ஏற்போம்
பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் கூறும்போது, உலக தண்ணீர் தினத்தில் நாம் அனைவரும் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைத்திடவும், தரமான தண்ணீர் கிடைத்திடவும், வான் தரும் மழையை ஒரு சொட்டு நீர் கூட வீணாக்காமல் சேமித்திட உலக தண்ணீர் தினத்தில் உறுதி ஏற்போம் என்றார். இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன், கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன், தி.மு.க. மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம் மற்றும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story