கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டு மிரட்டல்; 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது
கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டு மிரட்டல் 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது
கோவை
கோவை செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சுவாதி (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டது. இதையடுத்து செல்போன் செயலி மூலம் கடன் வாங்க முடிவு செய்தார். மேலும் அவர் பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட ஒரு நிறுவனத்தில் ஆப் மூலம் முதலில் கடன் வாங்கினார். பின்னர் அந்த கடனை அடைக்க கூடுதல் கடன் வாங்கினார்.
இந்த நிலையில் அவரது கடன் சுமை ரூ.64 ஆயிரமாக அதிகரித்தது. இந்த நிலையில் சுவாதி தான் பெற்ற கடனுக்கு வட்டியை மாதந்தோறும் செலுத்தி வந்தார். இதனிடையே சுவாதிக்கு கடன் வழங்கிய நிறுவனத்தின் மேலாளர் அர்சியா அப்ரின் (24), துணை மேலாளர் ரகுமான் செரீப் (24), யாசின் பாஷா (27), பர்வீன் (31) ஆகியோர் சுவாதியிடம் கூடுதல் வட்டி கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் சுவாதி தான் குறிப்பிட்ட தேதியில் பணம் செலுத்தி வருவதால் கூடுதல் வட்டி தர முடியாது என்று தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் அவர்கள் 4 பேரும், சுவாதியிடம் குறிப்பிட்ட தேதியில் பணம் கட்டவில்லை என்பதால் கூடுதல் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியதுடன், பணம் செலுத்த வில்லை என்றால் வேறு நிறுவனங்களில் கடன் வாங்க முடியாதபடி உங்களது ஆவணங்களை போலி என்று கூறி தடை செய்து விடுவோம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே உடனடியாக பணத்தை கட்டும்படி தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுவாதி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயதேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அர்சியா அப்ரின், ரகுமான் செரீப், யாசின் பாஷா, பர்வீன் ஆகிய 4 பேரை பெங்களூருவில் வைத்து கைது செய்தனர். மேலும் அவர்கள் ஆப் மூலம் கடன் பெற்ற வேறு நபர்கள் யாரையாவது மிரட்டி உள்ளனரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story