புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.42 கோடியில் புதிய புறநகர் பஸ்நிலையம்


புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.42 கோடியில் புதிய புறநகர் பஸ்நிலையம்
x
தினத்தந்தி 22 March 2022 9:45 PM IST (Updated: 22 March 2022 9:45 PM IST)
t-max-icont-min-icon

புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.42 கோடியில் புதிய புறநகர் பஸ்நிலையம் அமைக்கப்பட உள்ளது.

புதுச்சேரி, மார்ச்.22-
புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.42 கோடியில் புதிய புறநகர் பஸ்நிலையம் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுவதாக  கலெக்டர் வல்லவன் கூறினார்.
பஸ்நிலையத்தில் ஆய்வு
புதுவை பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நேரு எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாதது, இருக்கை வசதி இல்லாதது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் தொடர்பாக அரசிடம் அவர் புகார் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பஸ்நிலையத்தில் அதிகாரிகளுடன் நேற்று அவர் ஆய்வு மேற்கொண்டார். அரசு செயலாளர் அருண், கலெக்டர் வல்லவன், புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். பஸ் நிலையத்தின்   ஒவ்வொரு பகுதியாக சென்று அவர்கள் பார்வையிட்டனர்.
மேம்பாட்டு பணிகள்
அப்போது பஸ்நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் தொடர்பாக அதிகாரிகளிடம் நேரு எம்.எல்.ஏ. எடுத்துக் கூறினார். ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியை கொண்டு இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஆய்வுப்பணிகள் குறித்து கலெக்டர் வல்லவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய பஸ் நிலைய பிரச்சினைகள் தொடர்பாக தொகுதி எம்.எல்.ஏ. நேரு அரசின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். குறிப்பாக குடிநீர், கழிப்பறை, கண்காணிப்பு கேமரா செயல்படாதது தொடர்பாக கூறியுள்ளார். வாகன நிறுத்துமிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாகவும் தெரிவித்துள்ளார்.
கண்காணிப்பு கேமரா
இதுதொடர்பாக நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம். பஸ்நிலையத்தில் செயல்படாமல் உள்ள கண்காணிப்பு கேமராவை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் வசதிக்கான கட்டமைப்புகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் பழுதடைந்துள்ள சுத்திகரிப்பு கருவிகள் சீரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். சேதமடைந்த இருக்கைகள் புதுப்பிக்கப்படும். கழிப்பறைகள் சுத்தமாக உள்ளன. மேலும் விமான நிலையங்களில் உள்ளதுபோல் கழிப்பறைகளை பராமரிக்க கூறியுள்ளோம்.
ரூ.42 கோடியில் பஸ் நிலையம்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எந்தெந்த பணிகளை செய்ய முடியும் என்று ஆய்வு செய்து அவற்றை செய்து கொடுப்போம். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடி அருகே புதிதாக புறநகர் பஸ்நிலையம் அமைக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான கருத்துரு முதல்-அமைச்சர் ஒப்புதலுடன் ரூ.42 கோடியில் புதிய பஸ்நிலையம் அமைக்க கொள்கை அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பஸ்நிலையம் அமையும்போது நகரப்பகுதியில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story