மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரி கைது


மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரி கைது
x
தினத்தந்தி 22 March 2022 10:01 PM IST (Updated: 22 March 2022 10:01 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.

தேனி:
தேனி பகுதியை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் வீட்டில் சமோசா தயாரித்து டீக்கடைகளுக்கு வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு திருமணமாகி மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். 20 வயதான மூத்த மகள் உறவினர் ஒருவரின் வீட்டில் வளர்ந்து வருகிறார். 16 வயது 2-வது மகள் ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். 13 வயது கடைசி மகள் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிகளின் தந்தை மதுவுக்கு அடிமையாகி தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். 
மேலும் சிறுமிகள் இருவரும் வீட்டில் தூங்கும் போது அவர்களுக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டில் இருந்தே அவர் தனது மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். ஆனால், சிறுமிகள் பயத்தில் வெளியே கூறாமல் இருந்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி அவர் தனது மனைவியிடம் சண்டை போட்டபோது, சிறுமிகள் விலக்கி விட்டனர். அப்போது அவர் தனது இரு மகள்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார். இதையடுத்து சிறுமிகளும், தாயாரும் தங்களின் உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட 2-வது மகள், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் கொடுத்தார்.  அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தேனி அனைத்து மகளிர் போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். 
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தேனி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமிகளின் தந்தையை நேற்று கைது செய்தனர். பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story