மாணவ-மாணவிகளின் செயல்பாடுகளை தினமும் போலீசார் கண்காணிக்க வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு


மாணவ-மாணவிகளின் செயல்பாடுகளை தினமும் போலீசார் கண்காணிக்க வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
x
தினத்தந்தி 22 March 2022 10:04 PM IST (Updated: 22 March 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளிகளுக்கு தினமும் நேரில் சென்று மாணவ-மாணவிகளின் செயல்பாடுகளை போலீசார் கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

தேனி:
அரசு பள்ளிகளுக்கு தினமும் நேரில் சென்று மாணவ-மாணவிகளின் செயல்பாடுகளை போலீசார் கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
ஆய்வுக்கூட்டம்
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு பணிகள் தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமை தாங்கினார். மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள புகார்களின் விவரங்களை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்து, விசாரணைக்கான காலதாமதம் குறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். பின்னர் அவர் பேசியதாவது:-
தேனி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீசார் பணியாற்ற வேண்டும். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா, லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும். குறிப்பாக பள்ளி அருகாமையில் போதைப்பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமும் கண்காணிப்பு
பள்ளி மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இதற்காக ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளுக்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் செல்ல வேண்டும். அங்கு மாணவ-மாணவிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். மாணவர்களின் ஒழுங்கீனமாக செயல்பாடுகள் தெரியவந்தால் பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துபேசி சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து அறிவுறுத்த வேண்டும். மாணவ-மாணவிகளுக்கு தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேனி மாவட்டத்தில் இருந்து காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு அத்திவரதர் தரிசன நிகழ்வுக்கான பாதுகாப்பு பணிகளுக்கு சென்று வந்த 2 போலீஸ் துணை சூப்பிரண்டுகள், 22 இன்ஸ்பெக்டர்கள், 7 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 562 பேருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான பதக்கங்களை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார். மற்ற போலீசாருக்கான பதக்கங்களை போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மூலம் வழங்க, போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story