சாலையை மறித்த காட்டு யானைகள்: ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
தேன்கனிக்கோட்டை அருகே சாலையை காட்டு யானைகள் மறித்ததால் ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
தேன்கனிக்கோட்டை:
சாலையை மறித்த யானைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த பெட்டமுகிலாளம் அருகே உள்ள போல்காகொல்லை கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ். இவருடைய மனைவி பசவராணி (வயது 23). நிறைமாத கர்ப்பிணியான பசவராணிக்கு கடந்த 20-ந் தேதி இரவு பிரசவவலி ஏற்பட்டது. இதனால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து குடும்பத்தினர் அவரை 108 ஆம்புலன்சில் ஏற்றி உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். வழியில் அய்யூர் வனத்துறை சோதனைச்சாவடி அருகில் 12 காட்டு யானைகள் சாலையை மறித்தபடி நின்றன. இதனால் ஆம்புலன்சு டிரைவர் ஆஞ்சி வாகனத்தை நிறுத்தினார்.
ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது
இதையடுத்து அவர் உடனடியாக கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதனிடையே சிறிது நேரத்துக்கு பிறகு சாலையில் நின்ற யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. இதனால் ஆஸ்பத்திரிக்கு செல்ல முயன்றபோது, திடீரென பசவராணிக்கு ஆம்புலன்சிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து பசவராணி உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு தாயும், மகளும் டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளனர். காட்டு யானைகள் சாலையை மறித்ததால் ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story