மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நீர் ஆதாரத்தை பெருக்கும் நீர் உறிஞ்சி குழி அமைக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நீர் ஆதாரத்தை பெருக்கும் நீர் உறிஞ்சி குழி அமைக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் பேசினார்.
நெல்லிக்குப்பம்,
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கடலூர் ஊராட்சி ஒன்றியம் கரைமேடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது :-
ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் வீடுதோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மார்ச் 2024-ம் ஆண்டுக்குள் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மழைநீர் சேகரிப்பு
இதில், தற்போது வரை கடலூர் மாவட்டத்தில் 63 கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இவ்வாறு 100 சதவீதம் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சி என முறையாக அறிவிக்கப்பட வேண்டும்
மேலும், கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தவேண்டும். மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் மூலம் நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் தனிநபர் நீர் உறிஞ்சி குழி, சமுதாய நீர் உறிஞ்சி குழி போன்ற கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தீர்மானங்கள்
கூட்டத்தில் ஜல் ஜீவன் இயக்கத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். தினசரி நபர் ஒருவருக்கு 55 லிட்டர் குடிநீர் வழங்கப்படவேண்டும், குழாய் இணைப்பு மூலம் வழங்கப்படும் குடிநீர் பரிசோதனை மூலம் தரம் உள்ளதா என உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகா கமல் முன்னிலை வகித்தார். இதில் கூடுதல் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி, ஊராட்சி மன்ற துணை தலைவர் இளைய வாணி வேல்முருகன், மாவட்ட கவுன்சிலர் கல்யாணி ரமேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story