அங்கன்வாடி மையங்களில் சத்தான உணவுகள் வழங்கப்படுவதால் குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளனர். வேலூர் கலெக்டர் பேச்சு
அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் சத்தான உணவுகளால் குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளனர் என்று வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூற
வேலூர்
அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் சத்தான உணவுகளால் குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளனர் என்று வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
ஆரோக்கியமான குழந்தைகள்
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து 2 வார நிகழ்ச்சி அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந் தேதி நடைபெற உள்ளது. முதல்வாரம் ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறியும் நிகழ்ச்சியும், 2-ம் வாரம் ரத்தசோகை குறித்து விழிப்புணர்வு, குழந்தைகளுக்கான பாரம்பரிய ஊட்டச்சத்து உணவுகள் குறித்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
வேலூர் சத்துவாச்சாரி வ.உ.சி.நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறியும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணைமேயர் சுனில்குமார், கமிஷனர் அசோக்குமார், மாநகர் நலஅலுவலர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சத்தான உணவுகள்
நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளின் உயரம், எடை ஆகியவற்றை அளவீடு செய்தார். தொடர்ந்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறுகையில், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குழந்தைகளின் எடை, உயரம் உள்ளிட்டவற்றில் குறைபாடுகள் காணப்பட்டன.
அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் சத்தான உணவுகளால் ஊட்டச்சத்து குறைபாடின்றி குழந்தைகள் தற்போது ஆரோக்கியமாக உள்ளனர். குழந்தைகளின் எடை, உயரம் கணக்கிடப்பட்டு அவை செல்போன் செயலியில் பதிவு செய்யப்படும். பிரதமரின் போஷன் அபியான் திட்டத்தில் நடத்தப்படும் குழந்தைகள் வளர்ச்சி தொடர்பான போட்டியில் வேலூர் மாவட்டமும் பங்கேற்றுள்ளது. இதில், வேலூர் மாவட்டத்துக்கு விருது கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.
இதில், வேலூர் கிராமப்புற குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் சுஜாதா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், திட்ட உதவியாளர் சவீதா, இளநிலை பொறியாளர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கிணற்றை மூட கலெக்டர் உத்தரவு
நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அங்கன்வாடி மையத்தை சுற்றி பார்வையிட்டார். அப்போது அந்த மையத்தின் அருகே பயன்பாடற்ற திறந்தவெளி கிணறு, பெரிய அளவிலான கால்வாய்கள் இருப்பது தெரிய வந்தது. இதைக்கண்ட கலெக்டர், குழந்தைகள் எதிர்பாராத விதமாக கால்வாய் மற்றும் கிணற்றில் தவறி விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே கிணறு, கால்வாயை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த இடத்தை சுற்றி வேலி அமைத்து, அதனை புகைப்படம் எடுத்து தனது வாட்ஸ்-அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story