வாரசந்தை ஏலத்தில் தி.மு.க., அ.தி.மு.க. வினரிடையே தள்ளுமுள்ளு. ஏலம் ஏலம் ஒத்திவைப்பு


வாரசந்தை ஏலத்தில் தி.மு.க., அ.தி.மு.க. வினரிடையே தள்ளுமுள்ளு. ஏலம் ஏலம் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 22 March 2022 10:51 PM IST (Updated: 22 March 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

கந்திலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற மட்றப்பள்ளி வாரசந்தை ஏலத்தில் தி.மு.க., அ.தி.மு.க. வினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

திருப்பத்தூர்

கந்திலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற மட்றப்பள்ளி வாரசந்தை ஏலத்தில் தி.மு.க., அ.தி.மு.க. வினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

வாரச்சந்தை ஏலம்

கந்திலி ஊராட்சி ஒன்றியம் சார்பில் மட்றப்பள்ளி, பெரியகசிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள வாரச்சந்தை மூலம் பழங்கள், காய்கறிகள், ஆடுகள், மாடுகள் விற்பனை செய்ய வரும் வியாபாரிகளிடம் பணம் வசூல் செய்து கொள்ளும் குத்தகை ஏலம்  நடைபெற்றது. ஏராளமானோர் டெபாசிட் தொகை கட்ட வந்திருந்தனர். ஆனால் அவர்களிடம் ஏலம் எடுப்பவர் நேரில் வரவேண்டும், அடையாள அட்டை வேண்டும் என்று கூறி கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணம் வாங்க மறுத்தனர்.

இதனால் சிலர் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் தொடங்கிய ஏலத்தில் மட்றப்பள்ளி வாரச் சந்தை ஏலம் ரூ.10 லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து தொடங்கியது. அனைவரும் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கூறியதன் பேரில் ரூ.10 லட்சத்து 40 ஆயிரம் என அறிவிக்கப்பட்டது. உடனே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வினர் போட்டிபோட்டு ஏலம் கேட்டனர்.

தள்ளு முள்ளு

அப்போது தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தணிகாசலம் எழுந்து அ.தி.மு.க.வினரை பார்த்து பேசியது என்ன ஆனது, எதற்காக கட்டணத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறீர்கள் என கேட்டார். அதற்குள் சிலர் ஏலத்தை உயர்த்திக்கொண்டே செல்ல தணிகாசலம், குறிப்பிட்ட நேரத்திற்குள் ஏலத்தை ஆரம்பிக்கவில்லை, எங்கள் ஊரில் யாருக்கும் சரியான முறையில் நோட்டீஸ் அனுப்பவில்லை, டாம், டாம் போடவில்லை ஏலத்தை நிறுத்துங்கள் என கூறினார்.

அதற்கு அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த தசரதன், ராஜா மற்றும் தி.மு.க.வினர் அவரை நோக்கி அடிக்க வந்தனர். அவர்களை அ.தி.மு.க.வினர் அடிக்க வந்தனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஏலம் ஒத்திவைப்பு

உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரகலா பெல் அடித்து ஏலம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவித்தார். அதற்குள் வெளியே இருந்த தி.மு.க., அ.தி.மு.க.வினர் உள்ளே வந்தனர். அப்போதும் இரு பிரிவினரும் ஒருவரையொருவர் மாறி மாறி திட்டிக் கொண்டனர். சிலர் பிளாஸ்டிக் நாற்காலிகளை தூக்கி வீச முயன்றனர். அதற்குள் கந்திலி போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும்  சமாதானப்படுத்தி வெளியே அனுப்பினர்.
பின்னர் மாலை 3 மணி அளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெரிய கசிநாயக்கன்பட்டி வாரச் சந்தை ஏலம் நடை பெற்றது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story