தேனீக்கள் கொட்டியதில் 55 மாணவர்கள் மயக்கம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே தேனீக்கள் கொட்டியதில் 55 மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது.
திருவெண்ணெய்நல்லூர்,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சித்தானங்கூர் புனித ஜான் மேல்நிலைப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று மதியம் 1 மணி அளவில் மாணவ-மாணவிகள், பள்ளி வளாகத்தில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் கலைந்து கூட்டமாக பறந்து வந்து மாணவ-மாணவிகளை கொட்டியது. உடனே மாணவ-மாணவிகள் அலறி யடித்துக்கொண்டு ஓடினர்.
55 மாணவர்கள் மயக்கம்
தேனீக்கள் கொட்டியதில் 33 மாணவிகள், 22 மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலமாக இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி, திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் பாஸ்கரதாஸ் ஆகியோர் நேரில் சென்று மாணவர்களுக்கு ஆறுதல் கூறினர். சிகிச்சைக்கு பிறகு மாணவ-மாணவிகளை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
தேனீக்கள் அழிப்பு
இதனிடையே இ்ந்த சம்பவம் பற்றி அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தென்னை மரத்தில் கூடு கட்டி இருந்த தேனீக்களை பார்வையிட்டனர்.
பின்னர் மருந்து கலந்த தண்ணீரை தேனீக்கள் மீது பீய்ச்சி யடித்து, அவைகளை அழித்தனர். அதன்பிறகே மற்ற மாணவ-மாணவிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனால் அந்த பள்ளிக்கூடம் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story