ஒடுகத்தூர் அருகே காளை விடும் விழா நடத்தக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
ஒடுகத்தூர் அருகே காளைவிடும் விழா நடத்தக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அணைக்கட்டு
ஒடுகத்தூர் அருகே காளைவிடும் விழா நடத்தக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காளை விடும் விழா நடத்த எதிர்ப்பு
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் கிராமத்தில் காளை விடும் விழா நடைபெற இருந்தது. விழா குறித்து பேச்சுவார்த்தை நடத்திய நாளிலிருந்தே பெரிய ஏரியூர் கிராமத்தில் இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் நடந்து வந்தது. காளை விடும் விழா குறித்த பத்திரிகையில் முறைப்படி முக்கிய நபர்கள் பெயர்களையும், அரசியல்வாதிகள் பெயர்களையும் சரிவர சேர்க்காததால் விழாவை நடத்தக் கூடாது என ஒரு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் இரு தரப்பினரையும் அழைத்து நேற்று காலை பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்திற்கு அணைக்கட்டு தாசில்தார் தலைமை தாங்கினார். விழா நடத்தக்கூடாது என்று கூறிய தரப்பினர் மதியம் 12 மணி வரை வராததால் காளை விடும் விழாவை வேறு தேதிக்கு மாற்றுங்கள் என விழாக்குழுவினரிடம் தாசில்தார் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சாலை மறியல்
இதுகுறித்து விழாக்குழுவினர் ஊருக்குச் சென்று பொதுமக்களிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெரிய ஏரியூரை சேர்ந்த வாலிபர்கள், பெண்கள் உள்ளிட்டோர் திரண்டு நேற்று மாலை அந்த வழியாகவந்த அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி, காளை விடும் விழாவை நடத்த வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டவாறு பஸ்சுக்கு முன்னால் கற்களை வைத்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் உலகநாதன், அணைக்கட்டு தாசில்தார் விநாயகமூர்த்தி, ஒடுகத்தூர் வருவாய் ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் குறிப்பிட்டபடி விழாவை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இரவு வரை தாசில்தார் எந்த பதிலும் கூறாததால் பொதுமக்கள் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகின்றது.
Related Tags :
Next Story