தினத்தந்தி புகார் பெட்டி


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 22 March 2022 11:18 PM IST (Updated: 22 March 2022 11:18 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பயனற்ற நீர்த்தேக்க தொட்டி 
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், நல்லறிக்கை கிராமம், காலனி கிழக்குத் தெருவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அப்பகுதியில் ஆழ்துளை கிணறுடன் கூடிய நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. இதனை இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், மின் மோட்டார் பழுதடைந்து கடந்த 5 மாதங்களாக சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிப்பதற்கும், தங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் தண்ணீரின்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 
 பொதுமக்கள், நல்லறிக்கை, பெரம்பலூர்.

அச்சுறுத்தும் தெருநாய்கள் 
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் அளவுக்கு அதிகமாக தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக செல்பவர்களை கடிக்க வருவதுடன், திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் சிறுவர், சிறுமிகள் நடக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கீரமங்கலம், புதுக்கோட்டை. 

ஆபத்தான மின்கம்பம் 
கரூர் மாவட்டம், குளித்தலையில் இருந்து முசிறி புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் சந்தைபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செல்லும் சாலை அருகில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் துண்டாக உடைந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் பெருமளவில் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்களும் பழுதடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
 சுந்தர், குளித்தலை, கரூர்.

அடிப்படை வசதிகள் செய்துதரப்படுமா? 
திருச்சி தீரன் நகர் அருகே உள்ள ஸ்ரீ குபேரன் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் அடிப்படை தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி மற்றும் இப்பகுதிகளில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பைத்தொட்டிகள் என எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தெரு விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் இப்பகுதியில் பெண்கள், சிறுவர், சிறுமிகள் சாலையில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ஸ்ரீ குபேரன் நகர், திருச்சி.

பராமரிக்கப்படாத பொது கழிவறை
திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே  சிங்கர் கோவில் தெருவில்  ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக இப்பகுதியில் பொது கழிவறை அமைக்கப்பட்டது. இந்த கழிவறை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதாலும், பராமரிப்பு இன்றி உள்ளதாலும் தற்போது பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி முழுவதும் குப்பைக்கிடங்கு போல் காட்சி அளிப்பதுடன் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பாலசுப்பிரமணியம்,  கிழவாசல் , திருச்சி. 

பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்கும் வகையில் இப்பகுதியில் வாடகை கட்டிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  ஆனால் வாடகை கட்டிடம் பார்த்த பிறகும் இன்னும் அங்கு ரேஷன் கடை திறக்கப்படாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சோமரசம்பேட்டை, திருச்சி.

குரங்குகளால் தொல்லை 
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, திருத்தியமலை பஞ்சாயத்து  தி‌.மேட்டுப்பட்டியில்  ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை வீடுகளில் வைக்கப்பட்டுள்ள  தின்பண்டங்கள், மளிகை பொருட்கள், பழவகைகளை எடுத்துச்சென்று விடுகின்றன. மேலும் இப்பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகளை கடிக்க வருவது போல் அச்சுறுத்துகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், தி.மேட்டுப்பட்டி, திருச்சி. 


Next Story