மாணவர்கள்-பொதுமக்கள் சாலை மறியல்


மாணவர்கள்-பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 March 2022 11:44 PM IST (Updated: 22 March 2022 11:44 PM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு அருகே சேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மணல்மேடு:
மணல்மேடு அருகே சேதம் அடைந்த பள்ளி கட்டிடத்தை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேதம் அடைந்த பள்ளி கட்டிடம்
 மணல்மேடு அருகே உள்ள மண்ணிப்பள்ளத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள வகுப்பறைகளில் மேற்கூரைகள் முழுவதுமாக சேதம் அடைந்து காணப்படுகிறது.  இந்த நிலையில் மேற்கூரையில் இருந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து வகுப்பறையில் விழுந்துள்ளது. இதனால் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப அச்சம் அடைந்த பெற்றோர் இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். 
சாலை மறியல் 
தொடர்ந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியின் வாசலில் அமர்ந்து கட்டிடத்தை சீரமைக்க வலியுறுத்தி மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். 
இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய ஆணையர் அன்பரசு, தாசில்தார் ராகவன், ஊராட்சி மன்ற தலைவர் சேரன் செங்குட்டுவன், மணல்மேடு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது தற்காலிக கொட்டகை அமைத்து பள்ளியை இயக்குவது என்றும், பள்ளிக் கட்டிடம் ஒருசில மாதங்களில் சீரமைத்து தரப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை அவர்கள் தற்காலிகமாக கைவிட்டனர். 
3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
இந்த சாலை மறியல் காரணமாக மணல்மேடு-சீர்காழி சாலையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story