புதிய இரட்டை ரெயில் பாதையில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு


புதிய இரட்டை ரெயில் பாதையில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
x
தினத்தந்தி 23 March 2022 12:55 AM IST (Updated: 23 March 2022 12:55 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி-துலுக்கப்பட்டி இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரட்டை ரெயில் பாதையில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார்.

சாத்தூர், 
கோவில்பட்டி-துலுக்கப்பட்டி இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரட்டை ரெயில் பாதையில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார்.
இரட்டை ரெயில் பாதை
தென் தமிழகத்தில் அதிவேக ரெயில்களை இயக்கவும், ரெயில்களின் பயண நேரத்தை குறைக்கும் வகையிலும் தெற்கு ரெயில்வே சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை- தூத்துக்குடி இடையே 160 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.11,822 கோடி மதிப்பில் புதிதாக இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் ஒவ்வொரு பகுதியாக முடிவுற்ற பணிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே வாஞ்சி மணியாச்சி- தட்டப்பாறை, வாஞ்சி மணியாச்சி - கங்கைகொண்டான், வாஞ்சி மணியாச்சி - கடம்பூர், கோவில்பட்டி - கடம்பூர் இடையே முடிவுற்ற பணிகள் ஆய்வு செய்யப்பட்டு, ரெயில் சோதனை ஓட்டமும் நடைபெற்றது.
பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
இந்த நிலையில் கோவில்பட்டி முதல் துலுக்கப்பட்டி வரையிலான சுமார் 33 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிதாக இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அந்த பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து இந்த பாதையில் முடிவுற்ற பணிகளை ஆய்வு செய்வதற்காக நேற்று தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் தலைமையிலான குழுவினர் கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.
பின்னர் இந்த குழுவினர் 8 மோட்டார் டிராலி வண்டியில் சென்று ஆய்வு செய்தனர். முதலில் கோவில்பட்டியில் இருந்து சாத்தூர் ரெயில் நிலையம் வரையிலான முடிவுற்ற பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. சிறிய, பெரிய பாலங்கள், ரெயில் நிலையங்கள், ரெயில்வே கேட்டுகள், புதிய இரட்டை ரெயில் பாதை வலது, இடது பக்க வளைவுகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.
தொடா்ந்து மதியம் சாத்தூர் முதல் கோவில்பட்டி ரெயில் நிலையம் வரை ரெயில் சோதனை ஓட்டமும், மாலையில் சாத்தூர் முதல் துலுக்கப்பட்டி வரை டிராலியில் சென்று ஆய்வும் நடத்தினார்கள்.
இந்த ஆய்வில் ரெயில் விகாஸ் நிகாம் நிறுவன முதன்மை திட்ட இயக்குனர் கமலாகரரெட்டி, ரெயில்வே கட்டுமான முதன்மை நிர்வாக அதிகாரி பிரபுல்ல வர்மா, மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story